அரசு அலுவலகங்களில் மகளிருக்கு வசதிகள்? 50 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்குமா? தமிழக முதல்வருக்கு கோரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் மகளிரின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுத் துறைகளிலும் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் முதல்வர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், என்ற வேண்டுகோளும் தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது!!
சென்னை மாநகரில் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது..மாநில தலைவர் எஸ்.மதுரம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், அகில இந்திய தலைவர் கே.கணேசன் முன்னிலை வகிக்க, மாநில மகளிர் அணி செயலாளர் அ.ஆபிதம்மாள் அனைவரையும் அன்புடன் வரவேற்றார்..

அரசு அலுவலகங்கள்
இந்த விழாவின் ஒரு பகுதியாக செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய தலைவர் கே.கணேசன், தமிழக பெண் பணியாளர்களின் நீண்ட கால தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்..
குறிப்பாக தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் மகளிரின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் வழங்கப்பட வேண்டும்.. பெண்கள் பணியாற்றும் இடங்களில் தனியாக உணவருந்தும் அறை, உடை மாற்றும் அறை மற்றும் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை போன்ற வசதிகளை ஏற்படுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது..
தமிழக முதல்வர் ஸ்டாலின்
பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள், பூங்கா மற்றும் பண்ணைத் தொழிலாளர்கள், செவிலியர்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள், ஆய்வக உதவியாளர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோருடன் சேர்த்து, ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிகளில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் மகளிருக்கும் உரிய மரியாதை மற்றும் தேவையான வசதிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
தமிழக முதல்வர் பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல், அரசின் பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்படும் மகளிரை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்காமல், நேரடியாக அரசு பணியாளர்களாக அல்லது தினக்கூலி அடிப்படையில் நியமிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது..
தமிழக அரசு அலுவலகங்களில் பெண்கள்
மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களின் அரசு பணிகளில் பெண்களுக்கு குறைந்தது 50 சதவீதம் வேலை வாய்ப்பை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு, அது தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கம் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த கோரிக்கைகள் அனைத்தும், பெருத்த கவனம் பெற்று வருகிறது.
இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், அரசு துறைகளில் பணிபுரியும் பெண்களின் பணிச்சூழல் பெருமளவு மேம்படும் என்பது உறுதி.. குறிப்பாக, பிரத்யேக அறைகள் ஒதுக்கப்படுவதன் மூலம் பெண் ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், குழந்தைப் பராமரிப்புப் பணிகளிலும் எவ்வித தடையுமின்றி அவர்களால் கவனம் செலுத்த முடியும்..
50 சதவீத இட ஒதுக்கீடு
இது பெண் பணியாளர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, அவர்களின் பணித்திறனை பன்மடங்கு அதிகரிக்க வழிவகுக்கும்.. மேலும், தனியார் மயமாக்கலை தவிர்த்து அரசுப் பணியாளர்களாக நியமிக்கப்படும்போது, அவர்களுக்கு முறையான பணிப் பாதுகாப்பும் பொருளாதார நிலைத்தன்மையும் கிடைக்கும்..
அதிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவது சமூகத்தில் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துவதுடன், நிர்வாக ரீதியிலான முடிவெடுக்கும் அதிகாரத்தில் பெண்களின் பங்களிப்பை வலுப்படுத்தும்.. இத்தகைய மாற்றங்கள் பெண் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதுடன், தமிழக அரசு நிர்வாகத்தை சீராக முன்னெடுத்துச் செல்லவும் பெரும் உதவியாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது...!!












Click it and Unblock the Notifications