அரசு ஊழியர்கள் போல காப்பீடு..பாதுகாப்பு சட்டம் இயற்ற தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
சென்னை: பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் அரசின் இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் இலவச பேருந்து அடையாள அட்டை வழங்க வேண்டும். பத்திரிக்கையாளர்களின் வாழ்வாதாரத்திற்காக ஓய்வூதியம் பெறுவது மற்றும் பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர் ஆவதை எளிமையாக்க வேண்டும் என தமிழக பத்திரிகையாளர் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளது. பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சட்டம் இயற்றுவதோடு, அரசு ஊழியர்கள் போல் காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பத்திரிகையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு அவர்களுக்கு ஏற்ற திட்டங்களை அறிவிக்க வேண்டும் என தமிழக பத்திரிகையாளர் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளது.

தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சென்னை மண்டல நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் வடபழனியில் நடந்தது. மாநிலத் தலைவர் ப.ஹரிஹரன், மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.பாஷா, மாநில ஆலோசகர் டாக்டர் .முருகமணி தலைமை வகித்தனர். சென்னை மண்டலத் தலைவர் கே.என்.வடிவேல், தென் சென்னை மாவட்டத் தலைவர் வீரபாகு பிள்ளை முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், சமீப காலத்தில் பத்திரிகையாளர்களுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் பாதுகாப்பும் இல்லாத சூழல் இருப்பதை குறிப்பிட்டுப் பேசினர். சமூகத்தின் நான்காவது தூணாகிய பத்திரிகையாளர்கள் மீது பல இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறுவதையும் குறிப்பிட்டனர்.
கூட்டத்தின் முடிவில், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் அரசின் இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் இலவச பேருந்து அடையாள அட்டை வழங்க வேண்டும். பத்திரிக்கையாளர்களின் வாழ்வாதாரத்திற்காக ஓய்வூதியம் பெறுவது மற்றும் பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர் ஆவதை எளிமையாக்க வேண்டும். பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சட்டம் இயற்றுவதோடு, அரசு ஊழியர்கள் போல் காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், சென்னையில் மாநில அளவிலான மாநாடு நடத்துவது என்றும், அதில் அமைச்சர்கள் செய்தித் துறை தொடர்புடைய அதிகாரிகள், சட்டம், மருத்துவம், காவல், நீதித்துறை சேர்ந்த உயர் அலுவலர்கள், திரை பிரபலங்களை கலந்து கொள்ளச் செய்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், மாநிலப் பொருளாளர் பிரபு, மத்திய மண்டல தலைவர் சிவராமன், தென் மண்டல தலைவர் பாலகிருஷ்ணன், , மாநில முதன்மை செய்தித் தொடர்பாளர் மு.ஆதவன், சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் சண்.சரவணகுமார், மாநில துணை ஒருங்கிணைப்பாளர் சி.காவேரி மாணிக்கம்,சென்னை மண்டல இணை செயலாளர் பாலகணேஷ், மேற்கு மண்டல அமைப்பாளர் கோவிந்தராஜ்,மாநில செய்தி தொடர்பாளர் கார்த்திக், மாநில செயற்குழு உறுப்பினர் சரவணன், ஏ.பி.ஆர்.ஓ.ஐசக் ராஜா, தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் ராஜேஷ் மற்றும் சென்னை மண்டல , மாவட்ட நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications