விஜய் வீட்டில் இருந்த ஆவணங்கள்.. வருமான வரி வழக்கில் சிக்கிட்டாரே.. ஃபோகஸை திருப்பும் திமுக!
சென்னை: விஜய்க்கு எதிராக வருமான வரி வழக்கு கவனம் பெற்றுள்ளது. நேர்மை, நீதி என்றெல்லாம் பேசும் விஜய் வருமான வரி கட்டவில்லை என்பதை முன்னிறுத்தி திமுகவினர் பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் பல பிரச்சார மேடைகளில், நான் 200 கோடி ரூபாய் சம்பளத்தை விட்டுவிட்டு வந்திருக்கிறேன். எனக்கு ஏன் பணம்? நான் சொந்தமாக சம்பாதித்தவன்.

விஜய் வருமான வரி வழக்கு
நான் உச்சத்தை விட்டுவிட்டு வந்திருக்கிறேன். நான் யாரையும் ஏமாற்றவில்லை. இங்கே இருக்கும் சிலர் போல ஏமாற்றி பிழைக்கவில்லை. உங்களுக்கே அவ்வளவு இருக்கும் போது எனக்கு எவ்வளவு இருக்கும்? என்று விஜய் கடுமையாக பேசி வருகிறார். முக்கியமாக ஸ்டாலின் குடும்பத்தை நேரடியாக தாக்கும் வகையில் விஜய் கடுமையாக பேசி வருகிறார். இந்த நிலையில்தான் வருமான வரி விவகாரத்தில் சிக்கி உள்ள விஜய்க்கு பதிலடி கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் வருமான வரி கட்டவில்லை என்பதை முன்னிறுத்தி திமுகவினர் பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக சமூக வலைத்தளங்கள் வழியாக மக்களிடம் கொண்டு செல்ல திமுக திட்டமிட்டு வருகிறதாம். முக்கியமாக வருமான வரி வழக்கை வைத்து மிரட்டி பாஜகதான் இவரை அரசியலுக்கு வர வைத்துள்ளது என்றும் திமுக பிரச்சாரம் செய்ய உள்ளதாம்.
விஜய் வழக்கு
நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், வருமான வரித்துறையால் விதிக்கப்பட்ட ₹1.5 கோடி அபராதத்தை எதிர்த்துத் தொடுத்த வழக்கை, வருமான வரித்துறை கடுமையாக எதிர்த்துள்ளது. 2015-16 நிதியாண்டில் ₹15 கோடி கூடுதல் வருமானத்தை தாமாக முன்வந்து தெரிவிக்காததற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
நீதிபதி சி. சரவணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த வழக்கில், வருமான வரித்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.பி. சீனிவாஸ், "வருமான வரிச் சட்டம் 271AAB(1) பிரிவின் கீழ் அபராதம் சரியாகவே விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ரிட் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று வாதிட்டார்.
விஜய் தரப்பில் வாதம்
ஆனால், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், அபராத நடைமுறைகள் ஜூன் 30, 2019-க்குள் தொடங்கப்பட்டிருக்க வேண்டும், ஜூன் 30, 2022-ல் அல்ல என்பதால், கால அவகாசத்தால் பாதிக்கப்பட்டுள்ளன எனக் கூறினார். இதற்கு நீதிபதி, கால அவகாசம் தொடர்பான இதேபோன்ற வழக்கில் அவர் அளித்த தீர்ப்பை அக்டோபர் 10, 2025-க்குள் சமர்ப்பிக்கும்படி கேட்டார்.
முன்னதாக, ரிட் மனுவின் பின்னணியை விளக்கிய , வருமான வரித்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.பி. சீனிவாஸ்,, 2015 செப்டம்பர் 30 அன்று விஜய்யின் இல்லத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதாகவும், அப்போது குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
விஜய் வீட்டில் இருந்த ஆதாரங்கள்
விஜய் நடித்த 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான எஸ்.கே.டி ஸ்டுடியோஸைச் சேர்ந்த பி.டி. செல்வகுமார் மற்றும் ஷிபு ஆகியோர், காசோலை மூலம் வழங்கப்பட்ட ₹16 கோடி ஊதியத்தைத் தவிர, ₹4.93 கோடி ரொக்கமாகக் கொடுத்ததாக அந்த ஆவணங்கள் காட்டின.
காசோலைத் தொகைக்கு மட்டுமே டி.டி.எஸ் (TDS) பிடித்தம் செய்யப்பட்டிருந்தது, ரொக்கப் பரிவர்த்தனைக்கு அல்ல. இந்த ஆவணங்கள் குறித்துக் கேட்கப்பட்டபோது, விஜய் ₹5 கோடி ரொக்கமாகப் பெற்றதை ஒப்புக்கொண்டு அதற்கான வரிகளைச் செலுத்த சம்மதித்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆறு ஆண்டுகளில் கணக்கில் காட்டப்படாத வருமானம் எவ்வளவு என்று கேட்டபோது, புலி படத்துக்காகப் பெற்ற ₹5 கோடி தவிர வேறு எந்த ரொக்கத்தையும் பெறவில்லை என்று பதிலளித்தார். இருப்பினும், வருமான வரித்துறைக்கு ஒத்துழைக்கும் வகையிலும், வரிச் சிக்கல்களைச் சுமூகமாகத் தீர்க்கவும், 2015-16 நிதியாண்டில் ₹15 கோடி கூடுதல் வருமானத்தை (₹5 கோடி ரொக்கப் பரிவர்த்தனை உட்பட) வெளிப்படுத்தவும், அதற்கான வரிகளைச் செலுத்தவும் நடிகர் ஒப்புக்கொண்டார்.
விஜய் வழக்கு பின்னணி
இதையடுத்து, ஜூலை 29, 2016 அன்று, அவர் 2016-17 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தார். அதில் கூடுதல் ₹15 கோடி உட்பட மொத்தம் ₹35.42 கோடியை தனது வருமானமாக அறிவித்தார். வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும்போது, ₹17.81 லட்சம் மதிப்புள்ள சொத்துகளுக்கு தேய்மானத்தையும், ரசிகர் மன்றச் செலவுகளுக்காக ₹64.71 லட்சம் விலக்கையும் கோரினார்.
ஆனால், இந்த கோரிக்கைகளை வருமான வரித்துறை நிராகரித்ததுடன், டிசம்பர் 30, 2017 அன்று ஒரு உத்தரவை பிறப்பித்து, வரி விதிக்கக்கூடிய வருமானத்தை ₹38.25 கோடியாக நிர்ணயித்தது. சோதனைகள் நடத்தப்படாமல் இருந்திருந்தால் நடிகர் இந்தக் கூடுதல் வருமானத்தை வெளிப்படுத்தி இருக்கமாட்டார் என்றும் அந்த மதிப்பீட்டு உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
விஜய்க்கு அபராதம்
இதன் காரணமாக, வருமான வரிச் சட்டம் 271(1)(c) மற்றும் 271AAB(1) ஆகிய பிரிவுகளின் கீழ் துறை அபராதம் விதித்தது. மதிப்பீட்டு உத்தரவு மற்றும் 271(1)(c) பிரிவின் கீழ் விதிக்கப்பட்ட அபராதம் இரண்டையும் எதிர்த்து மேல்முறையீடு செய்தபோதிலும், 271AAB(1) பிரிவின் கீழ் விதிக்கப்பட்ட அபராதம் மட்டுமே ரிட் மனு மூலம் சவால் செய்யப்பட்டது.
ஆகஸ்ட் 16, 2022 அன்று ரிட் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி அனிதா சுமந்த், குறிப்பிட்ட காலத்திற்கு அபராதத் தொகையை வசூலிக்க வருமான வரித்துறைக்கு தடை விதித்தார். பின்னர், இந்த இடைக்கால உத்தரவு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டது. பிப்ரவரி 21, 2023 அன்று நீதிபதி அப்துல் குத்தூஸ், அடுத்த உத்தரவு வரும் வரை இடைக்கால உத்தரவு தொடரும் என்றார்.
இந்த ரிட் மனு கடைசியாக டிசம்பர் 2023-ல் விசாரணைக்கு வந்தது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வருமான வரி வழக்குகளை நீதிபதி சரவணன் இறுதியாக விசாரிக்கத் தொடங்கியதால், செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றது.












Click it and Unblock the Notifications