சூடுபிடிக்கும் தவெகவின் முதல் பொதுக்குழு.. ஏற்பாடுகளைச் செய்ய தனித்தனி டீம் அமைத்த விஜய்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் வருகிற 28 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பொதுக்குழுக் கூட்டத்திற்கான பணிகளை மேற்கொள்ள 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி ஓராண்டைக் கடந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி பிரமாண்டமாக நடந்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

தவெக மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாநாட்டை தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. அதற்கேற்ப அரசியல் வியூகங்களை விஜய் அமைத்து வருகிறார். மேலும் தமிழகம் முழுவதும் கட்சிக்கு மாவட்ட செயலாளர்கள், புதிய நிர்வாகிகளை விஜய் நியமித்து வருகிறார்.
இந்த நிலையில், வருகிற 28 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு நடைபெறவுள்ளது. மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை நியமித்த பிறகு நடைபெறும் கட்சி ரீதியில் மிக பெரிய நிகழ்வாக இந்த பொதுக்குழு பார்க்கப்படுகிறது. இந்த பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் சுமார் 2,500 முதல் 3000 வரை கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர் என்றும், மாவட்ட பொறுப்பாளர்கள், மற்ற நிர்வாகிகள் என பலரும் கலந்து கொள்ள உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. தவெக பொதுக்குழு கூட்டம் வருகிற 28ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பொதுக்குழுக் கூட்டத்திற்கான பணிகளை மேற்கொள்ள 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம், கழகத் தலைவர் விஜய் தலைமையில், வரும் 28ஆம் தேதி (28.03.2025) அன்று நடைபெற உள்ளதை அனைவரும் அறிவீர்கள். இந்தப் பொதுக்குழுக் கூட்டத்திற்கான பணிகளை மேற்கொள்ள, கழகத் தலைவர் அவர்களின் உத்தரவு மற்றும் ஆலோசனையின்படி கீழ்க்கண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வரவேற்புக் குழு, மேடை மற்றும் உள்ளரங்க மேலாண்மைக் குழு, தொழில்நுட்பக் குழு, ஊடக மேலாண்மை குடு, உபசரிப்பு குழு ஆகிய 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களுக்குப் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் முன்னேற்பாடுகள் தவெக நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து நடைபெற்று வரும் ஏற்பாடுகள், பணிகள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்து, விரைந்து பணிகளை முடிக்க அறிவுறுத்தினர்.












Click it and Unblock the Notifications