தமிழகம் என்றாலே ஒன்றியத்தில் ஆளும் பாஜகவுக்கு அலர்ஜி! இதில் இதுவேறயா? தவெக கண்டனம்
சென்னை: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது ஒன்றிய பாஜக அரதின் ஜனநாயகத்திற்கு எதிரான சதி என தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியிருப்பதாவது: வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் கொண்டு வரப்படும் இந்தப் புதிய நடைமுறையானது ஜனநாயக உரிமைகளைக் கேள்விக்குறியாக்கும். எனவே இதுகுறித்து தெளிவுப்படுத்த தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது.
பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் கடந்த 24.06.2025 அன்று இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிரத் திருத்தம் (special intensive revision) என்ற ஒன்றை பீகாரில் முன்னெடுக்க போவதாக அறிவித்தது. அதன்படி தேர்தல் ஆணைய அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் ஆவணங்களை தனிப்பட்ட விவரங்களைச் சரிபார்த்து வாக்காளர் பட்டியலை இறுதி செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி செய்வதன் மூலம் விடுப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும். தகுதியற்ற வாக்காளர்களின் பெயர்களை நீக்க முடியும். வெளிப்படைத்தன்மையோடு வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க முடியும் என இந்தியத் தேர்தல் ஆணையம் காரணம் சொல்கிறது.
ஆனால் பீகார் மாநில சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன. அடுத்த ஆண்டு தமிழகம் உள்ளிட்ட மேலும் சில மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அவசர அவசரமாகத் தேர்தல் ஆணையம் இப்படிப்பட்ட முடிவை எடுத்திருப்பது பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது.
ஏனெனில் கடைசியாக பீகாரில் 2003 ஆம் ஆண்டுதான் இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின்படி வாக்காளர் பட்டியல் உருவாக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 22 ஆண்டுகளில் மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்கள் பலவும் நடந்து முடிந்துவிட்டன.
அப்போதெல்லாம் இது போன்ற ஒரு திருத்தத்தைச் செய்யாத தேர்தல் ஆணையம் இப்போது திடீரென மீண்டும் இந்தத் திருத்தத்தை கையிலெடுக்கக் காரணம் என்ன? இந்த சரிபார்க்கும் திட்டத்தின்படி ஒரு சராசரிக் குடிமகனிடம் பிறப்புச் சான்றிதழோ, ரேஷன் கார்டோ, ஆதார் அட்டையோ அல்லது தேர்தல் ஆணையம் குறிப்பிடும் ஆவணங்களில் ஏதாவது ஒன்று இல்லையென்றால் அதற்காகவே அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிடுமா? என்ற சந்தேகத்தை அரசியல் செயற்பாட்டாளர்கள் எழுப்புகிறார்கள். இது குறித்த எந்த ஒரு விளக்கத்தையும் தேர்தல் ஆணையம் அளிக்கவில்லை.
ஒருவேளை வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்ட ஒருவர், மீண்டும் உரிய ஆவணங்களைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தால் அதைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்த பிறகு அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால் இப்படி மாநிலம் முழுவதும் இருந்து விண்ணப்பிக்கும் வாக்காளர்களின் ஆவணங்களைச் சரிபார்க்க நீண்ட கால அவகாசம் தேவைப்படும் அல்லவா?
பொதுவாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் ரேஷன் அட்டை உள்ளிட்ட ஆவணங்களைப் பெற அரசு அலுவலகங்களை நாடிச் சென்றால் அங்கு லஞ்ச லாவண்யம் தலைவிரித்து ஆடுவதோடு மட்டுமல்லால், இது போன்ற ஆவணங்களைப் பெறுவதற்கான வேலைகள், முடிவடைய குறைந்தது மூன்று மாதங்கள் முதல் 6 மாதங்கள், ஒரு வருடம் என பாமர மக்கள் அலைந்து திரிந்துதான் ஆவணங்களைப் பெறக் கூடிய சூழல் நிலவுகிறது.
அப்படியிருக்கையில் 4 மாதங்களில் தேர்தலை வைத்துக் கொண்டு நீண்ட கால அவகாசம் பிடிக்கும் இது போன்ற ஒரு நடைமுறையை அறிமுகப்படுத்துவது பொருத்தமான நடவடிக்கையா? என்ற சந்தேகமும் எழுகிறது.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் வாக்கு விகிதத்தை அதிகரிப்பதற்காக இருக்க வேண்டுமே தவிர அதற்கு எதிராக அல்ல. மேலும் இந்தப் புதிய நடைமுறை, வாக்காளர்களின் அடிப்படை உரிமை மீதே கைவைப்பது போல இருக்கிறது. ஏனெனில் அசாமில் , இது போன்ற முறையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுத் திட்டத்தை ஒன்றிய அரசு முன்னெடுத்த போது, அதில் நடந்த குளறுபடிகள் விளிம்பு நிலை மக்களை எப்படியெல்லாம் பாதித்தது என்பதை நாடு இன்னும் மறக்கவில்லை.
நடைமுறைச் சிக்கல்கள் ஒருபுறமென்றால் இன்னொரு புறம், இந்தத் திருத்தத்தின் பின்னால் ஏதும் அரசியல் காரணங்கள் இருக்கின்றனவா? என்கிற சந்தேகமும் எழாமல் இல்லை. இந்தத் திருத்தத்தைப் பயன்படுத்தி அரசியல் கட்சிகள் உள்ளூர் அதிகாரிகளைக் கையில் போட்டுக் கொண்டு தங்களுக்குச் சாததகமில்லாத எதிர் மனநிலையில் உள்ள வாக்காளர்களின் பெயர்களை நீக்கிவிடக் கூடிய பேராபத்து இருக்கிறது.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சிறுபான்மையின மக்களின் பெயர்கள் இறுதி நிமிடத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன என்பது போன்ற செய்திகள் ஊடகங்களில் வெளியானது அனைவருக்கும் நினைவிருக்கும். ஒரு வேளை, இந்தத் திருத்தத்தின் வழியே இப்படியான அராஜகங்கள் நிகழ்த்தப்பட்டால் அது குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதல் மட்டுமல்ல. இந்திய அரசியல் சாசனத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் , இந்திய ஜனநாயகத்தையே கேள்விக்குள்ளாக்கும் செயல்.
நம் தமிழகத்தில் ஏறத்தாழ 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது பதிவான வாக்கு சதவீதம் 69.72 சதவீதம். தேசிய சராசரியைவிட இது மூன்றரை சதவீதம் அதிகம். ஆனால் இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்தம் அடுத்தபடியாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டால் இந்த வாக்கு சதவீதம் குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
ஏற்கெனவே தமிழ்நாடு என்றாலே ஒன்றியத்தில் ஆள்பவர்களுக்கு அலர்ஜி. இந்தத் திருத்தத்தைக் காரணமாக வைத்து மதச் சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினச் சமூகத்தினர் ஆகியோரின் வாக்களிக்கும் உரிமையை பறிக்க நினைத்தால் அதற்கு தமிழக வெற்றிக் கழகம் கடுமையாக எதிர்வினையாற்றும்.
ஜனநாயகத்தின் மாண்பைக் கேள்விக்குள்ளாக்கும் இந்த புதிய திருத்தத்திற்குப் பதிலாக நடைமுறையில் இருக்கும் திட்டத்தின்படியே செயல்பட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரின் அறிவுறுத்தலின்படி தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம். அரசியல் வேற்றுமைகளைப் புறந்தள்ளி, இந்த விவகாரத்தில் இந்திய அரசியல் அமைப்பைக் காக்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications