பெரியார் திடலில் பார்த்தோமே! திமுக சாயலை சாயமாக பூசிக் கொண்டிருந்தாரே விஜய்! தமிழிசை விமர்சனம்
சென்னை: திமுக சாயலை சாயமாக பூசிக் கொண்டார் விஜய் என பாஜக மூத்த நிர்வாகியும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்திரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார். விஜய் இப்போதே மேக்கப் போட்டுவிட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை திநகரில் உள்ள தமிழக பாஜக தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் 74ஆவது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இது தொடர்பான விழாவில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டு தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்வுக்கு முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், முதல்வர் ஸ்டாலின் போல் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லமாட்டோம் என்பது போல் அல்லாமல், பெரியார் கொள்கைக்கு நாங்கள் எதிராக இருந்தாலும் கருப்புச் சட்டை அணிவோருக்கு காவிகளின் வாழ்த்துகள். தமிழகத்தில் எதிர்மறை அரசியலை கொண்டு சென்றதற்கு திமுகவுக்கு பெரும் பங்கு இருக்கிறது.
திமுக சாயலில் இன்னொரு அரசியல் கட்சி தேவையில்லை, தேசிய சாயலில்தான் மாற்று வர வேண்டும். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வேறு வழியில் பயணிப்பார் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் கட்சி தொடங்கும் முன்னரே விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாதது போன்றவற்றை முன்வைத்து கொள்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு சாயலை சாயமாக விஜய் பூசிக் கொண்டிருக்கிறார். பின்னர்தான் சாயம் வெளுக்கிறதா இல்லை வேறு சாயம் பூசிக் கொள்கிறாரா என்பது தெரியும். இரு கட்சிகளும் அவரை விட்டுவிடுவார்களா, திரைப்படத்தையே வெளியிட அனுமதிப்பதில்லை. மாநாட்டை நடத்த அனுமதிக்க மறுக்கிறார்கள்.
அவர் தேசியத்துடன் வந்தாலாவது பரந்து பட்ட மனதோடு எடுத்துச் செல்வோம். திராவிட சாயத்தை பூசினால் அவ்வளவுதான். மத்திய தலைமைதான் கூட்டணியை முடிவு செய்யும். எதிர்மறை அரசியலில் பாஜகவுக்கு விருப்பமில்லை, அப்படிப்பட்ட கொள்கையை எடுத்துக் கொண்டால் ஆதரிப்போம். ஏன் கட்சி தொடங்கும் முன்னரே இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறார் என தெரியவில்லை.
அவரது திரைப்படம் தெலங்கானாவிலும் வெளியாகும். இந்த வியாபாரத்துக்கு பல மொழிகள் தேவைப்படுகிறது. ஆனால், மக்களின் படிப்புக்கு பல மொழிகள் தேவையில்லை என சொல்வது அப்பட்டமான ஒன்று என தெரிவித்துள்ளார். தமிழிசை மேலும் பேசுகையில், தமிழக பாஜக மட்டுமல்லாமல் தமிழக மக்கள் சார்பிலும் மூன்றாவது முறையாக இந்தியாவை வலிமையாக வழிநடத்திக் கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அது போல் 100 நாட்களை கடந்து சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார், அதற்கும் வாழ்த்துகள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், இன்று பெரியார் திடலுக்கு சென்று அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வந்து முதல் முறையாக விஜய் நேரில் அஞ்சலி செலுத்திய தலைவர் என்றால் அவர் பெரியார்தான். கடந்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு தனது நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications