அல்லு அர்ஜுன் கைது.. அப்போ மெரினா பீச் கூட்ட நெரிசலுக்கு தமிழக ஆட்சியாளர்களை கைது செய்யனுமே- தமிழிசை
சென்னை: தெலுங்கானா மாடலின் படி கைது நடவடிக்கை என்றால் சென்னை விமானப்படை வான் சாகச நிகழ்வை பார்க்க வந்து 5 பேர் பலியான விவகாரத்தில் இங்கே யாரை கைது செய்திருக்க வேண்டும்? தமிழக ஆட்சியாளர்களையா? என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
'புஷ்பா 2' படத்தின் சிறப்பு காட்சியின் போது கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி பெண் ஒருவர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் பெயரும் இடம்பெற்றிந்த நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து இடைக்கால ஜாமீன் கிடைத்த நிலையில் இன்று காலை அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள பதிவில், "தும்பை விட்டுவிட்டு வாலை பிடித்த கதை... இதுதான் தெலுங்கானாவில் அல்லு அர்ஜுன் அவர்களின் கைதில் நடந்திருப்பது. சத்யா தியேட்டரில் புஷ்பா 2 கூட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்திருப்பது கவலை அளிக்கக் கூடியது அதே நேரத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது காவல்துறையின் கடமை..
ஓரிடத்தில் தேவைக்கு அதிகமான கூட்டம் சேர ஆரம்பித்த உடனேயே காவல்துறை கண்காணிப்பையும் கட்டுப்பாட்டையும் உடனே துரிதப்படுத்த வேண்டும். அசம்பாவிதம் நடக்கும் வரை பார்த்துவிட்டு பின்பு கூட்டம் கூடியதற்காக நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்தது தவறான முன்னுதாரணம்.
சென்னையிலும் வானூர்தி சாகசத்தின் போதும் கூட்டம் கூட ஆரம்பித்த உடனேயே தமிழக காவல்துறை முன்னெச்சரிக்கையுடன் நடந்திருக்க வேண்டும் காவல்துறையின் பாதுகாப்பு தோல்வியினால் மனதிற்கு வேதனையாக ஐந்து உயிர்கள் பறிபோயின தெலுங்கானா மாடலின் படி கைது நடவடிக்கை என்றால் இங்கே யாரை கைது செய்திருக்க வேண்டும்? தமிழக ஆட்சியாளர்களை? தெலுங்கானா மாடலும் திராவிட மாடலும் வியப்பைத் தான் அளிக்கின்றன" எனத் தெரிவித்துள்ளார்.
விமானப்படை தொடங்கப்பட்டு 92வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இந்திய விமானப்படை சார்பாக வான் சாகச நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்தது. இதைக் காண 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடினர். இதனால் சென்னை முழுக்க கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையில் காலை முதலே வெப்பநிலை அதிக அளவில் இருந்ததால், விமான சாகசங்களை காண மெரினா கடற்கரைக்கு வந்த மக்கள் வெயிலின் தாக்கத்தால் கடும் அவதிக்கு உள்ளாகினர். கடும் வெப்பத்தாலும், கூட்ட நெரிசலாலும் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
மெரினா கடற்கரைக்கு விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் உயிரிழந்தனர். சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான வான்வழி சாகச நிகழ்ச்சியை காண வந்த லட்சக்கணக்கான நபர்களில் 5 பேர் கடும் வெப்பத்தால் நீர்ச்சத்து குறைந்து உடல்நலம் பாதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அரசு உரிய ஏற்பாடுகளைச் செய்யாததே உயிர் பலிக்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த 5 பேர் உயிரிழந்தது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. அண்ணா சதுக்கம் காவல்நிலையம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மெரினா காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 5 பேர் உயிரிழப்பு குறித்து இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications