"டுடோரியல் ஒன்றும் கேவலமான இடமல்ல".. அந்த வார்த்தையை கேட்டதும்.. தமிழிசைக்கு வந்ததே கோபம்.. சீற்றம்
தமிழ்நாடு மக்கள் நிர்வாக திறன் கொண்ட எங்களை போன்றவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை என்று தமிழிசை கூறி இருந்தார்.
சென்னை: பாஜக கட்சியில் இருந்து ஆளுநர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களை சமீபத்தில் சிபிஎம் எம்பி சு வெங்கடேசன் விமர்சனம் செய்து இருந்தார். இதற்கு தமிழிசை சௌந்தரராஜன் தற்போது பதிலடி கொடுத்தார்.
தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் முழுக்க மொத்தம் 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் - நாகாலாந்து ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

தமிழிசை
இதன் 3 மூலம் டாப் பாஜக நிர்வாகிகள் தற்போது ஆளுநர்களாகி உள்ளனர். தமிழிசை, இல கணேசன், சி பி ராதாகிருஷ்ணன் என்று முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் ஆளுநர்களாகி உள்ளனர். எம்பி தேர்தலில் தோல்வி அடைந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராகவும் பணியாற்றி வருகிறார். இந்த ஆளுநர் நியமனங்கள் குறித்து கருத்து தெரிவித்த, தமிழிசை சௌந்தரராஜன், எங்களை போன்ற திறமைசாலிகளுக்கு பாஜகதான் வாய்ப்பு கொடுக்கிறது. ஆனால் மக்கள் வாய்ப்பு கொடுப்பது இல்லை.

வாய்ப்பு தரவில்லை
தமிழ்நாடு மக்கள் நிர்வாக திறன் கொண்ட எங்களை போன்றவர்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் அங்கீகாரம் கொடுக்கவில்லை. எங்களை அவர்கள் புறக்கணித்துவிட்டார். மாநிலங்களில் பதவியேற்கும் ஆளுநர்கள் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரால் பரிசீலனை செய்யப்பட்டு அவர் ஜனாதிபதியால் தேர்வு செய்யப்படுகிறார்கள். எங்களுக்கு திறமை இருக்கிறது. ஆனால் மக்கள் இதை அடையாளம் காணவில்லை. மத்திய அரசு திறமையானவர்களை அடையாளம் கண்டு ஆளுநர்களாக நியமித்து வருகிறது. தமிழ்நாடு மக்கள் நல்லவர்களையும், திறமையானவர்களையும் அடையாளம் காண வேண்டும். தமிழ்நாடு மக்கள் எங்களை போன்றவர்களை நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்து இருந்தால் பலர் மத்திய அமைச்சர்களாகி இருப்பார்கள், என்று குறிப்பிட்டார்.

சு. வெங்கடேசன்
இதை சிபிஎம் சு. வெங்கடேசன் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். தங்களுக்கு மக்கள் வாய்ப்பு கொடுக்கவில்லை என்று தமிழிசை சொன்னதை கிண்டல் செய்த சு. வெங்கடேசன், ராஜ்பவன்கள் எல்லாம் பெயிலானவர்கள் படிக்கிற டுடோரியல் கல்லூரிகள் என்கிறீர்களா தமிழிசை அவர்களே. பரிட்சையில் பெயில் ஆன பிறகு பிரதமர் பாஸ் போட்டு விட்டார் எனில் அது போலிச் சான்றிதழ் இல்லையா?, என்று சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதற்கு தமிழிசை சௌந்தரராஜன் அளித்துள்ள பதிலில், ராஜ்பவன்கள் டுடோரியல் ஆக உள்ளது என்று வெங்கடேசன் சொல்கிறார்.... டுடோரியல் ஒன்றும் கேவலமான இடமல்ல.

அறிவாற்றல்
அதுவும் கல்வி பயிலும் புனிதமான இடம் தான்... டுடோரியலில் படிப்பவர்கள் கூட படித்து அறிவாற்றல் பெற்று தேர்வாகிறார்கள் - தங்களைப் போல அறிவாலய வாசலில் நின்று பெற்றது அல்ல.... தேர்தல் வெற்றி மட்டுமே ஒருவருக்கு அங்கீகாரம் கிடையாது... ராஜ்பவன்கள் பயிற்சி பட்டறைகளாக இருக்கலாம்... அரண்மனை வாரிசுகளை உருவாக்கும் இடமாக இல்லை என்பதில் பெருமையே....நேற்று வென்றவர்கள் நாளை தோற்கலாம்... நேற்று தோற்றவர்கள் நாளை வெல்லலாம்... இறுமாப்பு வேண்டாம்... ஆளுநர் ஆவதற்கும் பல சிறப்பு தகுதிகள் வேண்டும்.. அதைப்போன்ற தகுதிகளை தாங்கள் பெறப்போவதில்லை... மறுபடியும் சொல்கிறேன் இறுமாப்பு வேண்டாம்... என்று தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications