மயிலாப்பூரில் வெல்வாரா தமிழிசை சவுந்தரராஜன்? அப்பவே கலைஞர் அப்படி சொன்னாரே?
சென்னை: "அப்பா என்கூட பேசலையே" என்று ஒரு குழந்தைபோல அன்று ஏங்கி தவித்த தமிழிசைதான், இன்று கடந்த காலங்களில் தான் வகித்த வலிமை மிகுந்த அதிகாரமிக்க பொறுப்புகளைத் துறந்துவிட்டு மீண்டும் மக்கள் களத்தில் தனது அடுத்தகட்ட அரசியல் சாதனையை நிகழ்த்தத் தயாராகி வருகிறார்.. ஆளுநர் போன்ற உயரிய பதவிகளை மிகத் திறமையாகக் கையாண்டு அனுபவம் பெற்ற இவர், தற்போது மீண்டும் மக்கள் பிரதிநிதியாகத் தொண்டர்களோடு தொண்டராக மயிலாப்பூரில் களம் இறங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது..
தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பேயே மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திடீரென பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை 4 நாளைக்கு முன்பு ஏற்படுத்தி விட்டது.

தமிழிசை சவுந்தரராஜன்
தான் போட்டியிடும் தொகுதி குறித்து கட்சிதான் முடிவு செய்யும் என ஏற்கனவே தமிழிசை தெரிவித்திருந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக, மயிலாப்பூர் தொகுதியின் வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக மேலிடம்.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு, திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார் தமிழிசை. பிறகு ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்த பிறகு அவர் இந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார்.
பாப்பாவை அரசியலுக்கு..?
கடந்த 1996-ல் மூத்த தலைவர் யசோதா, ஒருமுறை குமரி அனந்தனிடம் பேசும்போது, "பாப்பாவை அரசியலுக்கு கூட்டிட்டு வந்துடுங்கன்னு" என்று அன்று சொல்லவும் கொதித்துபோனாராம் குமரி அனந்தன்,,, "நான் இருக்கிற வரைக்கும் அது நடக்காது, எனக்கு வாரிசு அரசியல் பிடிக்காது, அதனால என் பொண்ணை வாரிசாக கொண்டு வர மாட்டேன்" என்று திடமாக சொல்லியும் விதி வேறு விதமாக சென்றது!
இளம் வயதில், தன்னுடைய அப்பாவின் பேச்சால் எவ்வளவு மயங்கி விழுந்தாரோ, அதே அளவுக்கு ஈர்ப்பு மறைந்த தலைவர் வாஜ்பாய் பக்கமும் தன்னையும் அறியாமல் தமிழிசைக்கு ஏற்பட்டது... பாஜகவின் உறுப்பினராகவும் தன்னை இணைத்துக் கொண்டார்.
"அதிகபிரசிங்கத்தனம் எதற்கு" என்று தந்தையின் கோபத்துக்கு 6 மாச காலம் ஆளானதையும், அப்பா பேசலையே என்று மனம் நொந்தும் போனதும் உண்டு!
ஆனால், ஒரு மாவட்ட தலைவர் என்ன சொன்னாலும் சரி, அந்த கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடந்தார் அன்றே புகழ்பெற்ற டாக்டராக உயர்ந்திருந்தார் தமிழிசை சவுந்தரராஜன்.. இதை தந்தை குமரி அனந்தனும் பலமுறை கவனித்து மனதுக்குள் வருத்தப்படவும் செய்தாராம்.
ஆனால், அப்போதும் சரி, இப்போதும் சரி.. விமர்சனங்களை தாங்கி கொள்ள பழக்கப்படுத்தியது அன்றே கண்ணியத்துடன் தமிழிசையை, மூத்த தலைவர் குமரி அனந்தன் வளர்த்த விதம்தான்!
கலைஞர் - பாராட்டிய வார்த்தை
எதிர்க்கட்சியினரே என்றாலும்கூட, இதுவரை யாரையும் கடிந்ததோ, தரக்குறைவாகவோ பேசாதவர் தமிழிசை.. "குமரியார் மகளிடம் நாகரீக பேச்சு எப்போதுமே இருக்கும்" என்று மறைந்த கலைஞர் கருணாநிதியே உயர்த்தி சொல்லும் அளவுக்கு தன்னை பக்குவப்படுத்தி கொண்டவர்..
கடந்த காலங்களில் பல்வேறு சவால்களைத் திறம்படச் சந்தித்த அனுபவத்தோடு, இதோ இப்போது மீண்டும் மயிலாப்பூர் தொகுதியில் வேட்பாளராகத் தனது அரசியல் பலத்தைக் காட்டக் களம் இறங்குகிறார். இதனால் இங்கு ஒரு நேரடி "ஹை-புரொபைல்" மோதல் உருவாகியுள்ளது..
இங்கு திமுகவின் சிட்டிங் எம்எல்ஏ வேலு களத்தில் உள்ளார்.. இவர் 30 வருட காலத்துக்கும் மேலாக மக்கள் பணியில் தன்னை இணைத்து கொண்டவர்.. கடந்த 2021 தேர்தலில் 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அனுபவத்துடன் களம் காணும் வேலு, "சொன்னதைச் செய்தோம்" என்கிற கோஷத்துடன் தனது கடந்த கால மக்கள் நலப்பணிகளை முன்னிறுத்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்..
அரசு நடைமுறைப்படுத்தியுள்ள மகளிர் இலவச பேருந்து பயணம் மற்றும் உரிமைத் தொகை போன்ற திட்டங்கள் அவருக்குச் சாதகமான அம்சங்களாகப் பார்க்கப்பட்டாலும், நகர்ப்புறப் பிரச்சனைகள் மற்றும் உள்ளூர் அதிருப்திகளைச் சமாளித்து தனது வெற்றி வாய்ப்பைத் தக்கவைக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார்..
அக்கா - வெற்றி பெறுவாரா
மற்றொருபுறம், பாரம்பரியமாக திமுகவின் கோட்டையாகக் கருதப்படாத மயிலாப்பூரில், நடுத்தர வர்க்கம் மற்றும் குறிப்பிட்ட சமூக வாக்குகளைக் கவர்ந்து வெற்றியைத் தன்னுடைய பக்கம் திருப்ப தமிழிசை சவுந்தரராஜன் அதிரடியாகக் களம் இறங்கியுள்ளார்.
போக்குவரத்து நெரிசல் மற்றும் கழிவுநீர் மேலாண்மை போன்ற உள்ளூர் பிரச்சனைகளை முன்வைத்து பாஜக தொடுக்கும் அரசியல் தாக்குதல்கள் திமுகவிற்கு சவாலாக அமையலாம்.. இதனால், 2 தரப்பிற்கும் இடையே இழுபறி நீடிக்கும் சூழலில், புதிய வாக்காளர்களின் ஆதரவைப் பெறுபவருக்கே இந்தத் தேர்தல் ஒரு முக்கிய அரசியல் திருப்பமாக அமையும் என்று கணிக்கப்படுகிறது..
எனினும், "அக்கா" என்ற அடைமொழியுடன் தமிழக மக்களால் பாசத்தோடு அழைக்கப்படும் தமிழிசை சவுந்தரராஜன், இந்த மயிலாப்பூர் தேர்தல் களத்தில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று வெற்றிக் கனியைப் பறிப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications