ஜனநாயக முறைப்படி "ஜனநாயகன்" முடிவெடுக்க வேண்டும்.. என்டிஏ கூட்டணிக்கு விஜய்யை அழைத்த தமிழிசை!
சென்னை: ஜனநாயக முறைப்படி முடிவெடுக்க வேண்டியது ஜனநாயகன் விஜய்யின் கடமை என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். என்டிஏ கூட்டணியில் இணைவதுதான் விஜய்க்கு பாதுகாப்பு என்ற நயினார் நாகேந்திரனின் கருத்து உண்மை என்று கூறிய தமிழிசை செளந்தரராஜன், எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரியக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் 2வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை தேமுதிக விஜயகாந்த் குருபூஜை விழாவாக அனுசரித்து வருகிறது. இதனையொட்டி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் சுதீஷ், விஜய பிரபாகரன் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் அமைதி பேரணியில் ஈடுபட்டனர்.

அதேபோல் விஜயகாந்தின் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய நிலையில், பாஜக நிர்வாகிகளான தமிழிசை செளந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
இதன்பின் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அண்ணன் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதற்காக பெருமை கொள்கிறேன். என்னை தங்கச்சி என்று அழைப்பார். அப்படி அழைக்கும் சில அரசியல்வாதிகளில் விஜயகாந்த் முதன்மையானவர். வெள்ளந்தியான மனிதர் அவர்.. அரசியலில் நேர்மையாக இருந்தவர் என்றார்.
தொடர்ந்து, விஜயகாந்த் மோடி மீது அன்புடன் இருந்தவர். தமிழ்நாட்டில் தூய்மையான ஆட்சி அமைய வேண்டுமென்று விஜயகாந்த் நினைத்தார். அது நிறைவேற வேண்டும். அதேபோல் தமிழகத்தில் தூய்மையான ஆட்சி அமைய வேண்டுமென்று விஜயகாந்த் நினைத்தார். அது நிறைவேற வேண்டும். விஜய் எங்களோடு வருவதுதான் அவருக்கு பாதுகாப்பு என்ற நயினார் நாகேந்திரனின் கருத்து யதார்த்தமான உண்மை.
ஜனநாயக முறைப்படி முடிவெடுக்க வேண்டியது ஜனநாயகனின் கடமை. எதிர்க்கட்சிகளின் வாக்குகள் ஒன்றாக இருக்க வேண்டும். எதிர்க்கட்சியின் வாக்குகள் பிரியக் கூடாது என்றே எல்லோரும் கூறுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். பாஜகவை கொள்கை எதிரி என்று விஜய் அறிவித்த பின்னரும் கூட, பாஜக தரப்பில் தொடர்ந்து விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications