ராஜேந்திர சோழனின் வழித்தடத்தை தேடும் ஸ்டாலின்.. 10 முக்கியமான அறிவிப்பு.. மீண்டு எழும் தமிழர் வரலாறு
சென்னை: தமிழ்நாடு அகழ்வாராய்ச்சி தொடர்பாக முக்கியமான 10 அறிவிப்புகளை இன்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் வெளியிட்டார். தமிழ் மண்ணை ஆண்ட மன்னன் ராஜேந்திர சோழனின் வழித்தடத்தை தேடி செல்லும் விதமாக இந்த ஆராய்ச்சி அமையும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
Recommended Video
தமிழ்நாடு அரசு இந்திய வரலாற்றில் மிகப்பெரிய அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ளும் முடிவில் இறங்கி உள்ளது. கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பல வியத்தகு முடிவுகள் வெளியானதை அடுத்து தமிழ்நாடு அரசு இந்த அகழ்வாராய்ச்சியை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. கடலுக்கு உள்ளேயும், கடல் கடந்தும் ஆய்வும் மேற்கொள்ளும் திட்டத்தில் தமிழ்நாடு அரசு இறங்கி உள்ளது.
ராஜராஜ சோழனுக்கு பின் தமிழ் மண்ணை ஆண்ட ராஜேந்திர சோழன் உலகம் முழுக்க பல நாடுகளுக்கு பயணம் செய்து வணிகம் மேற்கொண்டார். ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய வணிகம் மேற்கொண்ட பகுதியாக தமிழ் மண் அப்போது விளங்கியது. இதற்கான வரலாற்று சான்றுகளும் உள்ளன. இந்த சான்றுகளை அடிப்படையாக வைத்தே சர்வதேச அளவில் ஆய்வுகளை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசிய போது இன்று வெளியிட்ட 10 முக்கியமான அறிவிப்புகள் பின்வருமாறு, அறிவிப்பு 1. நெல்லையில் 15 கோடி ரூபாய் மதிப்பில் மாபெரும் அருங்காட்சியகம் அமைக்கப்படும். இது பொருநை அருங்காட்சியகம் என்று அழைக்கப்படும். 3200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது பொருநை ஆற்றங்கரை நாகரீகம். ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய பகுதிகளை கொண்டது பொருநை ஆற்றங்கரை நாகரீகம்.

கேரளா ஆராய்ச்சி
அறிவிப்பு 2. அகழாய்வுகளில் செய்யப்பட்ட கார்பன் டேட்டிங் சோதனை முடிவின் படி கொற்கை துறைமுகம் கிமு 8ம் நூற்றாண்டுக்கு முன்பே செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு 3. தமிழ்நாட்டின் பண்டைய முசிறி நகரம் இப்போது கேரளாவில் பட்டணம் என்ற பெயரில் அமைந்துள்ளது. அறிவிப்பு 4. தமிழ் வரலாற்று கொண்ட சேரநாட்டின் தொன்மை, பண்பாட்டினை அறிந்து கொள்ள கேரள தொல்லியல் வல்லுநர்களுடன் இணைந்து ஆய்வுப்பணி செய்யப்படும்.

கீழடி
அறிவிப்பு 5. ஆதிச்சநல்லூர் சிவகளை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நெல் மணிகள் அமெரிக்காவிற்கு சோதனைக்கு அனுப்பப்பட்டது. கார்பன் டேட்டிங் சோதனையில் இந்த நெல்மணிகள் காலம் கிமு 1155 என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு 6. ஆந்திர மாநிலத்தின் வேங்கி, கர்நாடக மாநிலத்தின் தலைக்காடு ஒடிசா மாநிலத்தின் பாலூர் உள்ளிட்ட வரலாற்று இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அறிவிப்பு 7 . கீழடி நாகரீகம் கிமு 6ம் நூற்றாண்டை சேர்ந்தது என்று கார்பன் டேட்டிங் சோதனை உறுதி செய்யபட்டுள்ளது என்பதை உறுதி செய்துள்ளது.

எகிப்து
அறிவிப்பு 8. ரோம் பேரரசின் ஒரு பகுதியான எகிப்து மற்றும் ஓமன், மலேசியா, வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து, நாடுகளில் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அறிவிப்பு 9. கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகள, மயிலாடும்பாறை, கங்கை கொண்ட சோழசுரம் ஆகிய இடங்களில் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதை அடிப்படையாக வைத்து கடலாடி ஆய்வு மேற்கொள்ளப்படும்.

ராஜேந்திர சோழன்
அறிவிப்பு 10. ராஜேந்திர சோழன் தெற்காசிய நாடுகளில் மாபெரும் வணிகம் புரிந்த மன்னன். நம் வணிக பயணம் தெற்காசிய முழுக்க அப்போது கோலோச்சியது. ராஜேந்திர சோழன் வெற்றித்தடம் பதித்த தெற்காசிய இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். நாடுகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் உரிய அனுமதி பெற்று ஆய்வு மேற்கொள்ளப்படும், என்று முதல்வர் ஸ்டாலின் 10 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications