தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்கள் மட்டுமே இருக்கு.. அர்ச்சனா பட்நாயக் சொன்ன அப்டேட்!
சென்னை: தமிழ்நாட்டிற்கான சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட சூழலில், ஒவ்வொரு கட்சியாலும் அறிவிக்கப்படும் வேட்பாளர்கள் 4 நாட்களில் மட்டுமே வேட்புமனுஇ தாக்கல் செய்ய முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. மார்ச் 31, ஏப்ரல் 3, 4 மற்றும் 5 ஆகிய தேதிகள் விடுமுறை என்பதால், வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது என்று மாநில தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட சூழலில், வேட்புமனு தாக்கல் மார்ச் 30ஆம் தேதி தொடங்க உள்ளது.

இதன்பின் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளாக ஏப்ரல் 6ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 7ஆம் தேதி நடக்கிறது. வேட்புமனுவை திரும்ப பெறுவதற்காக கடைசி நாளாக ஏப்ரல் 9ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்பின் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடக்கிறது. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் தேர்தல் தொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மார்ச் 15ஆம் தேதி வரை வாக்காளர்கள் எண்ணிக்கை 5.69 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர். அதில் 2.90 கோடி பெண் வாக்காளர்களும், 2.78 கோடி ஆண் வாக்காளர்களும் இருக்கின்றனர். அதேபோல் வேட்பாளர்கள் 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.
மார்ச் 30ஆம் தேதி காலை 11 மணி முதல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். மார்ச் 31, ஏப்ரல் 3, 4 மற்றும் 5 ஆகிய நாட்களில் வேட்பு மனு தாக்கல் முடியாது. அன்றைய நாட்களில் பொது விடுமுறை என்பதால், அந்த நாட்களில் அரசு அலுவலகங்கள் செயல்படாது என்று தெரிவித்துள்ளார். இதனால் வேட்பாளர்கள் மார்ச் 30, ஏப்ரல் 1, ஏப்ரல் 2 மற்றும் ஏப்ரல் 6 ஆகிய 4 நாட்களில் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கொடுக்கப்பட்ட 8 நாட்களில் 4 நாட்கள் விடுமுறை என்பது விவாதமாகி இருக்கிறது. பல்வேறு புதிய வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதால், அவர்கள் முன்கூட்டியே வேட்புமனு தாக்கலை செய்து முடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் மூலமாக கடைசி நேர குழப்பங்களை தவிர்க்க முடியும் என்றும் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications