அதிகாலையிலேயே.. ஆர்வமுடன் வாக்களிக்க வந்த தமிழக மக்கள்.. பல இடங்களில் நீண்ட லைன்.. காரணம் வெயில்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களிக்க மக்கள் அதிகாலையில் இருந்தே ஆர்வமாக லைனில் காத்து இருக்கிறார்கள். வெயிலை தவிர்க்கும் வகையில் அதிகாலையிலேயே மக்கள் வாக்குச்சாவடி நோக்கி சென்றுள்ளனர்.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று நடக்கும் தேர்தலில் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிமுக, திமுக, அமமுக-தேமுதிக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் என ஐந்து முனை போட்டி நிலவுகிறது. 234 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று 6.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில்1,03,202 தபால் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளன. காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரை வாக்கு பதிவு நடக்க உள்ளது. கடைசி 1 மணி நேரம் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று சட்டசபை தேர்தலில் வாக்களிப்பதற்காக காலையிலேயே மக்கள் வரிசையில் காத்திருக்க தொடங்கினார்கள். தமிழகம் முழுக்க பல தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் மக்கள் வாக்களிக்க லைனில் காத்து இருந்தனர். 7 மணிக்குதான் வாக்கு பதிவு என்றாலும் 6.30 மணிக்கே வாக்களிக்க மக்கள் லைனில் காத்து இருந்தனர்.
போக போக வெயில் அதிகமாக இருக்கும் என்பதாலும், கொரோனா காலம் என்பதாலும் மக்கள் அதிகாலையிலேயே வாக்களிக்க வாக்குசாவடிகளுக்கு வந்தனர். இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கும் அதிகமாக வெப்பநிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
பல மாவட்டங்களில் வெயில் கொளுத்த போகிறது. இதனால் வெயிலை தவிர்க்கும் வகையில் அதிகாலையிலேயே மக்கள் வாக்களிக்க காத்து உள்ளனர். மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வந்துள்ளதால் கண்டிப்பாக இந்த முறை வாக்கு பதிவு சதவிகிதம் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து 4.20 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதனால் இந்த முறை வாக்குப்பதிவு சதவிகிதம் முன்பை விட அதிகம் இருக்கும் என்கிறார்கள்.