ஏஞ்சல் முதலீடுகளில் தமிழ்நாடு முதலிடம் ! 1 டிரில்லியன் கனவுக்கான வெற்றிப்படியில் ஸ்டாலின் அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் முதலாக செல்லும் இடங்களில் எல்லாம், 'தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்துவோம்' என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். அதுவும், '2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் இலக்கை எட்டுவோம்' என்கிறார்.

'இந்தக் கனவு மெய்ப்பட்டுவிட்டால், இந்தியாவில் தமிழ்நாடு தனித்துவமான மாநிலமாகிவிடுமா?' என சில விமர்சகர்கள் கேள்வி எழுப்பலாம். மருத்துவம் மற்றும் உயர்கல்வி ஆகியவற்றில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. அத்துடன் இது ஒரு இமாலய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

'இதை அடைவதற்கான அறிகுறிகள் ஏதாவது தென்படுகிறதா?' என்ற சந்தேகம் சிலருக்கு வரலாம். உண்மையைச் சொன்னால் அதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன என்றே சொல்லவேண்டும்.

அதாவது 'ஏஞ்சல் இன்வெஸ்மெண்ட்'டை பொருத்தவரை இந்திய அளவில் தமிழ்நாடு இப்போது முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டைப் பொருத்தவரை தமிழ்நாடு ஏஞ்சல் முதலீட்டில் முன்னணியில் வந்துள்ளதாக அண்மையில் வெளியாகியுள்ள புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.

 அது என்ன ஏஞ்சல் இன்வெஸ்மெண்ட்?

அது என்ன ஏஞ்சல் இன்வெஸ்மெண்ட்?

ஒரு சிறு முதலீட்டு நிறுவனம், அதிகளவில் கவனம் பெறுகிறது என வைத்து கொள்வோம். அந்த நிறுவனத்தைத் தேடிப் பிடித்து கோடிஸ்வரர் ஒருவர், அதனை மேலும் வலுவாக்கும் வகையில் தனது நிதியை அதில் முதலீடு செய்வார். அவ்வாறு நிதியை முதலீடு செய்யும்போது, அந்த நிறுவனமும் வளரும், அந்த கோடீஸ்வரரின் முதலீட்டுக்கும் நல்ல பலன் கிடைக்கும். அதையே 'ஏஞ்சல் இன்வெஸ்மெண்ட்' என்கிறோம்.

அப்படியான முதலீட்டைப் பெறுவதில் கடந்த 2022 ஆம் ஆண்டைப் பொருத்தவரை தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. 2022 ஆம் ஆண்டில் மட்டும் பிரைவேட் ஈக்விட்டி அண்டு வெண்ட்சர் கேபிட்டல் (Private Equity and Venture Capital) ஆகியவற்றைத் தமிழ்நாடு அதிகம் பெற்றுள்ளது.

அதன் அடையாளமாக, பல்வேறு நிறுவனங்களின் மூலம் மொத்தம் 65 ஒப்பந்தங்கள் கடந்த ஆண்டில் மட்டும் கையொப்பமாகியுள்ளன. இதனால் சுமார் 2,614 மில்லியன் டாலர் முதலீடுகள் தமிழ்நாட்டுக்குள் வந்துள்ளன.

மேலே குறிப்பிட்ட இந்தப் பட்டியலில் சுமார் 45 நிறுவனங்கள் தமிழகத்தைத் தலைமையிடமாகவே கொண்டு இயங்கி வருகின்றன என்பது கூடுதல் சிறப்பு. மேலும், 20 நிறுவனங்கள் வெளிநாடுகளில் தங்களின் தலைமையகத்தை வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள நிறுவனத்தை நிர்வகித்து வருகின்றன. ஆனாலும், இந்நிறுவனங்கள் தங்களின் பெரும்பாலான வணிகத்தைத் தமிழ்நாட்டில் வைத்துள்ளன.

'வென்ச்சர் இன்டலிஜென்ஸ்' வழங்கியுள்ள தரவுகளின் அடிப்படையில், 2021 ஆம் ஆண்டில், பிரைவேட் ஈக்விட்டி அண்ட் வெண்ட்சர் கேபிட்டல் (PE-VC) செய்துள்ள 66 நிறுவனங்கள் மொத்தமாக சுமார் 2,040 மில்லியன் டாலரை முதலீடு செய்துள்ளன என்பதும் தெரியவந்துள்ளது.

 அது என்ன பிரைவேட் ஈக்விட்டி?

அது என்ன பிரைவேட் ஈக்விட்டி?

அதாவது, ஒரு நிறுவனம் தனது உற்பத்தியைச் செய்யும். ஆனால், சர்வதேச அளவில் தர உற்பத்தியைத் திறம்பட கொண்டு செல்வதில் ஏதேனும் தடைகள் இருக்கலாம். அவ்வாறு ஏற்படும் தடைகளைக் களைய அவர்களுக்கு வழிகாட்டல் தேவைப்படும். எனவே, இந்நிறுவனம் சர்வதேச நிறுவனத்தின் ஆலோசனையும் கூட்டு முயற்சியையும் பெறத் திட்டமிடும். அப்படி பெறுவதையே 'பிரைவேட் ஈக்விட்டி' என்கிறோம்.

இதனை எளிமையாகப் புரியும்படி சொன்னால் இந்திய நிறுவனமான மாருதி, வெளிநாட்டு நிறுவனமான சுசூகியுடன் இணைந்து தயாரிப்பில் ஈடுபடுகிறது அல்லவா? அதைப் போன்று செய்வதைத்தான் 'பிரைவேட் ஈக்விட்டி' எனக் குறிப்பிடுகிறார்கள்.

இதுபோன்ற 66 நிறுவனங்கள், தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் மட்டும் மொத்தமாக 2,040 மில்லியன் டாலரை முதலீடு செய்துள்ளன. அதாவது 2021 ஆண்டில் 43 நிறுவனங்களும் 2020 ஆண்டில் 25 நிறுவனங்களும் தமிழ்நாட்டில் முதலீட்டைச் செய்துள்ளன.

இந்த விவரங்களுடன் ஒப்பிடும்போது 54 நிறுவனங்கள் தரமான 'ஏஞ்சல்' நிதியைப் பெற்றதாக தரவுகள் சொல்கின்றன. அந்தவகையில், 2022 ஆம் ஆண்டைப் பொருத்தவரை தேசிய சராசரி முதலீடுகளுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாடு நல்ல மதிப்பெண்ணைப் பெற்றுள்ளது என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.

அதாவது, '1 டிரில்லியன் டாலர்' என்று இலக்கு நிர்ணயித்துவிட்டு மட்டும் ஸ்டாலின் அரசு அமைதியாக இருந்துவிடவில்லை. அதற்கான செயல்வடிவத்தையும் செய்து காட்டியுள்ளதையே இந்தப் புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

இந்தியாவில் பிரைவேட் ஈக்விட்டி அண்டு வெண்ட்சர் கேபிட்டல் (Private Equity and Venture Capital ) நிறுவன முதலீடுகளைப் பொருத்தவரை 2021 ஆம் ஆண்டின் சாதனையுடன் ஒப்பிடும்போது 2022-ல் 29 சதவீதம் குறைந்துள்ளதாக தேசிய தரவு சுட்டிக் காட்டுகிறது.

பிரைவேட் ஈக்விட்டி அண்டு வெண்ட்சர் கேபிட்டல் நிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டில் மட்டும் 46 பில்லியன் டாலர்களை (1,261 ஒப்பந்தங்கள்) இந்திய அரசுடன் இணைந்து முதலீடு செய்துள்ளன. இதற்கு முந்தைய ஆண்டில் 65 பில்லியன் டாலர் (1,362 ஒப்பந்தங்கள்) அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், மேலும் சில தரவுகளுடன் ஒப்பிடப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்தியாவில் 2022 ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 21 'யூனிகார்ன்' நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

 ‘யூனிகார்ன்’ நிறுவனங்கள் என்றால் என்ன?

‘யூனிகார்ன்’ நிறுவனங்கள் என்றால் என்ன?

வெண்ட்சர் கேபிட்டல் நிதியுடன் கூடிய ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் 1 பில்லியன் டாலர் அல்லது அதற்கு மேல் வரை தனது மதிப்பைத் தொட்டுவிட்டால் அதைத்தான் 'யூனிகார்ன்' என்று கூறுகிறார்கள்.

அதன்படி பார்த்தால் இவற்றில் 18 நிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டில் முதல் ஆறு மாதங்களிலும் 2021 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட 44 யூனிகார்ன்களைவிட பாதிக்கும் குறைவானதாகவே உள்ளன என்று புள்ளிவிவரம் கூறுகிறது. உண்மையில், '2022-ன் இறுதிக் காலாண்டில் புதிய யூனிகார்ன்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை' என்பது இந்திய அளவில் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

2022 ஆண்டைப் பொருத்தவரை உருவாக்கப்பட்ட புதிய யூனிகார்ன்களில் 29 சதவீதம் SaaS என்ற நிறுவனங்கள் சார்ந்தவை என்றும் அடுத்தபடியாக 19 சதவீத யூனிகார்ன்கள் Fintech சார்ந்தவை என்றும் தரவுகளில் விளக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக, 'இந்தியாவில் உருவாக்கப்பட்ட யூனிகார்ன் ஸ்டார்ட்அப்களில் (2022 மட்டும்) 9.8 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளன. இது முந்தைய ஆண்டைவிட 61 சதவீதம் குறைவு' எனவும் தரவுகள் கூறுகின்றன.

ஆக, தற்போதைய தரவுகளின் அடிப்படையில் தொழில்சார்ந்த 'ஏஞ்சல்' முதலீட்டைப் பெறுவதில் தமிழ்நாடு, நல்ல விகிதாச்சாரத்தைப் பெற்று இந்திய அளவில் முன்மாதிரி மாநிலமாக முன்னேறியிருக்கிறது.

மனோ தங்கராஜ்

மனோ தங்கராஜ்

'தொழில்துறையைப் பொருத்தவரை. ஐடி துறையில் மட்டும் 100 பில்லியன் டாலரை இலக்காக வைத்து தமிழ்நாடு இயங்கி வருகிறது' என்று அமைச்சர் மனோ தங்கராஜ் முன்பே கூறியுள்ளார்.

அதற்கான நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதுரை, மாட்டுத்தாவணியில் 600 கோடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா தொடங்கப்பட உள்ளது. இதைப்போல பல மாவட்டங்களில் புதிதாக ஐ.டி பூங்காக்கள் தொடங்கப்பட உள்ளன.

இவையெல்லாம் 5 ஆண்டுகால ஆட்சிக்குள் நிறைவேறிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியென்றால் 1 டிரில்லியன் டாலர் என்ற இலக்கை 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு எட்டிவிடும்.

'இதனால் தனிநபருக்கு என்ன லாபம்? தமிழ்நாட்டின் பொருளாதாரம்தானே உயரும்' எனப் பலரும் சொல்கிறார்கள். அதற்குத் தொழிலதிபர் சுரேஷ் சம்பந்தம் ஒரு விளக்கத்தை முன்வைக்கிறார்.

''தமிழ்நாட்டின் பொருளாதாரம் தற்போது 300 பில்லியன் என்ற அளவில் இருக்கிறது. 1 டிரில்லியன் என்றால் கிட்டத்தட்ட மூன்று மடங்கு தமிழ்நாட்டின் பொருளாதாரம் கூட வேண்டும். இன்றைக்கு ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட 2 முதல் 2.5 லட்சம் வரை உள்ளது.

அப்படியென்றால் ஒரு குடும்பத்தில் ஒருவருக்குச் சராசரி 20 ஆயிரம் ரூபாய் வருமானம் வருகிறது. இந்த 2.5 லட்சம் குடும்ப வருமானம் என்பது 7.5 லட்சம் ரூபாய் அளவுக்கு உயர்த்துவதே முக்கியமானது. இந்த வளர்ச்சியை அனைத்து மட்டத்தில் உள்ள குடும்பங்களுக்கும் நாம் கொண்டுபோக வேண்டும். அப்போதுதான் சரியான வளர்ச்சி ஏற்படும். ஆக, இந்த 7.5 லட்சம் குடும்ப வருமானத்துக்கும் தமிழ்நாட்டின் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்துக்கும் நெருங்கிய உறவு உள்ளது" என்கிறார்.

அந்தவகையில், தமிழ்நாடு வளர்ந்தால், தனிநபர் வருமானமும் வளரும் என்பது வெளிப்படை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+