ஈரோடில் இடைத்தேர்தல்.. அதிமுகவுக்கு ஆதரவாக களமிறங்கிய அண்ணாமலை.. பிரச்சார தேதி அறிவிப்பு!
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்.19 மற்றும் பிப்.20 ஆகிய தேதிகளில் அண்ணாமலை பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்.27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் வரும் மார்ச் மாதம் 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த இடைத்தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இதில், மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல் அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு போட்டியிடுகிறார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
அதுமட்டுமல்லாமல் தேமுதிக வேட்பாளராக ஆனந்த் மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மேனகா ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமல்லாமல் ஏராளமான சுயேட்சை வேட்பாளர் உள்பட மொத்தமாக 77 பேர் போட்டியிடுகின்றனர். இதனால் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து முக்கியக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக கூட்டணி
இந்த இடைத்தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்று அதிமுகவினர் தீவிரமாக களப்பணி மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் களமிறக்கப்பட்டு தெரு தெருவாக வாக்கு சேகரித்து வருகின்றனர். அதேபோல் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக கூட்டணி கட்சிகளான தமாகாவும் வாக்கு சேகரித்து வருகிறது.

ஈரோடு வரும் அண்ணாமலை
தமிழ்நாடு பாஜக தரப்பில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கப்பட்டிருந்த நிலையில், மாநிலத் தலைவர் அண்ணாமலை இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார். இதனால் ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொள்வாரா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அண்ணாமலை 2 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2 நாட்கள்
பிப். 19 மற்றும் பிப்.20 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தில் பாஜகவுக்கு செல்வாக்கு இருப்பதாக பார்க்கப்படும் சூழலில், அண்ணாமலையின் பிரச்சாரம் அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. அதேபோல் அண்ணாமலை பிரச்சாரம் செய்வதற்கான பணிகளை அக்கட்சியின் மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications