சென்னை 4, கோவை 3, மதுரை 2.. 50 தொகுதிகளில் பணிகளை தொடங்கும் பாஜக வேட்பாளர்கள்.. பரபரப்பான கமலாலயம்!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் போட்டியிட இருக்கும் 50 தொகுதிகளில் பணிகளை நிர்வாகிகள் தொடங்க தமிழக பாஜக தலைமை அறிவுறுத்தி இருக்கிறது. சென்னையில் 4 தொகுதிகள், கோவையில் 3 தொகுதிகள், மதுரையில் 2 தொகுதிகளில் தமிழக பாஜகவினர் தேர்தல் பணிகளை தொடங்க இருக்கின்றனர். இதன் மூலமாக வேட்பாளர்களும் ஓரளவுக்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அண்மையில் பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலை பல்வேறு கருத்துக்களை கூறி இருந்தார். குறிப்பாக இதுவரை நான் போட்டியிடும் தொகுதி எது என்று தெரியாது.. ஒரு மாதத்தில் தேர்தல் பணிகள் செய்தால் எப்படி வெல்ல முடியும் என்று ஆவேசமாக கேள்வி எழுப்பி இருந்தார்.

தமிழக பாஜக திட்டம்
இதையடுத்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சில முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறார். அதாவது 50 தொகுதிகளுக்கான பணிகளை உடனடியாக தொடங்க அந்தந்த நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருக்கின்றனர். அதிமுக உடனான தொகுதி பங்கீட்டில் எத்தனை தொகுதிகள் என்பது முடிவாகவில்லை என்றாலும், சில தொகுதிகளில் பணிகளை தொடங்க முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
சென்னையில் 4 தொகுதிகள்
அதன்படி சென்னையில் மட்டும் 4 தொகுதிகளில் போட்டியிட பாஜக தயாராக உள்ளது. விருகம்பாக்கம், வேளச்சேரி, மயிலாப்பூர், தியாகராய நகர் ஆகிய தொகுதிகளில் பாஜக ஹேர்தல் பணிகளை தொடங்க உள்ளது. இதில் விருகம்பாக்கம் தொகுதியில் தமிழிசை செளந்தரராஜன், வேளச்சேரி தொகுதியில் எஸ்ஜி சூர்யா, ஸ்ரீதர், கராத்தே தியாகராஜன், தியாகராய நகரில் வினோஜ் பி செல்வம் உள்ளிட்டோர் பணி செய்ய உள்ளனர்.
கோவையில் 3 தொகுதிகள்
அதேபோல் மயிலாப்பூர் தொகுதியில் நாராயணன் திருப்பதி போட்டியிட விருப்பம் தெரிவித்து பணிகளை செய்ய தொடங்கி இருக்கின்றனர். கோவையில் கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன், சிங்காநல்லூர் தொகுதியில் அண்ணாமலை, தாராபுரம் தொகுதியில் எல்.முருகன் ஆதரவாளர் போட்டியிடக் கூடும் என்று தெரிகிறது.
உத்தேச வேட்பாளர்கள்
திருப்பூர் தெற்கு தொகுதியில் ஏபி முருகானந்தம், ஈரோடு கிழக்கு கிருத்திகா சிவக்குமார், மொடக்குறிச்சியில் ஜிகே நாகராஜன், உதகையில் போஜராஜன் உள்ளிட்டோர் பணிகளை தொடங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லை மற்றும் சாத்தூர் ஆகிய இரு தொகுதிகளிலும் பணிகளை தொடங்கி இருக்கிறார்.
மதுரையில் 2 தொகுதிகள்
விளவங்கோடு தொகுதியில் விஜயதரணியும், திருச்செந்தூர் தொகுதியில் ராதாகிருஷ்ணன், மதுரை வடக்கு தொகுதியில் தென்னிந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் திருமாறனும், திருப்பரங்குன்றத்தில் ராம சீனிவாசன் ஆகியோரும் பணிகளை தொடங்கியுள்ளதாக தெரிய வந்திருக்கிறது. தஞ்சையில் கருப்பு முருகானந்தம், கும்பகோணத்தில் நாராயிணி உள்ளிட்டோரும் பணிகளை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications