விஜய் எதிர்ப்பை கண்டுக்கல.. பரந்தூர் விமான நிலைய பணிகள் விரைவுப்படுத்தப்படும்! பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை: தமிழக சட்டப் பேரவையில் 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பரந்தூர் பகுதியில் சென்னை இரண்டாம் விமான நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு பல அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு பட்ஜெட் கூட்டத்தில் பரந்தூர் விமான நிலைய பணிகள் விரைவுபடுத்தப்படும் என்று கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவை தொடங்கியதுமே அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தமிழக அரசின் டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் அவை வெளிநடப்பு செய்தனர்.

ஆனாலும் தொடர்ந்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை தொடர்ந்து வந்தார். அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும் என்பதால் இது தேர்தலுக்கு முன்பான திமுக அரசின் முழு பட்ஜெட் ஆகும். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு அரசு பட்ஜெட் கூட்டத்தில் பரந்தூர் விமான நிலைய பணிகள் விரைவுபடுத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தலைநகர் சென்னையின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தற்போதுள்ள சென்னை சர்வதேச விமான நிலையம் கூட்டம் அதிகரிப்பதாலும், தேவை தொடர்ந்து அதிகரிப்பதாலும் இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் இரண்டாம் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கு அந்த ஊர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அங்கு விவசாய நிலங்கள் அதிகளவு உள்ள நிலையில், பரந்தூரை சுற்றியுள்ள 13 கிராம மக்கள் சுமார் 1,000 நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு திமுகவின் கூட்டணியில் உள்ள கட்சிகள் தொடங்கி புதிதாக தொடங்கப்பட்ட தவெக வரை பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இது அரசியல் ரீதியாக திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டிருந்த விளக்கத்தில்," பரந்தூரில் அமைக்கப்படும் சென்னையின் இரண்டாம் விமான நிலையத்தில் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறோம்.. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமலும், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு உறுதுணையாக இருக்கும் என்று இந்தத் திட்டத்தை செயல்படுத்த முனைந்துள்ளோம்.
இந்திய விமான ஆணையத்தின் ஆய்வுகள்படி சென்னை விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கு முதலில் பரிசீலனையில் இருந்த பண்ணூர் பகுதியை விட பரந்தூர் பகுதி மிகவும் பொருத்தமாக இருக்கிறது. பண்ணூர் பகுதியில் 1,546 குடும்பங்கள் வசிக்கிறார்கள். அதுவே பரந்தூரில் 1,005 குடும்பங்களே உள்ளனர். இதனால் நிலம் கையகப்படுத்தல் செலவு குறையும்.
கடந்த 2020 ஆம் ஆண்டில் முந்தைய ஆட்சியில் தான் சென்னை இரண்டாம் விமான நிலையத்துக்கு பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. தற்போதைய சென்னை சர்வதேச விமான நிலையம் 1,000 ஏக்கர் பரப்பளவில் தான் அமைந்துள்ளது. பரப்பளவில் சற்று சிறியதாக இருந்தாலும் ஆண்டுக்கு சுமார் 2 கோடி மக்கள் சென்னை விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர். அடுத்த 10 வருடங்களில் இது 8 கோடியாக அதிகரிக்கும் என்று ஆய்வில் சொல்லப்படுகிறது.
அந்த மக்களின் குறைகளை பரிவுடன் ஆராய்ந்து மக்கள் நலனைப் பாதுகாப்போம். மேலும் பரந்தூர் பகுதியின் நீர்நிலைகளை எந்தளவுக்கு சீர் செய்ய முடியும் என்பதை ஆய்வு செய்வதற்காக உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. "என்று கூறியிருந்தது. ஆக பரந்தூர் விமான நிலையத்தில் மக்கள் எதிர்ப்பை மீறி திட்டத்தை செயல்படுத்த அரசு உறுதியாக இருக்கிறது என்று ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்திலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தன் உரையின்போது, "பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் பணிகள் விரைவுப்படுத்தப்படும்." என்று கூறியுள்ளார். இது பரந்தூர் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் இது திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications