'விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் வேண்டாம்னு.. நாங்க எப்போ சொன்னோம்..' முதல்வர் விளக்கம்: பாஜக கப்சிப்
சென்னை: பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து சட்டசபையில் பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். இதற்கு விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட மத விழாக்களுக்கு என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்,
இந்தியாவின் அனைத்து மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 2ஆம் அலை ஏற்பட்டது. அப்போது நாட்டில் தினசரி வைரஸ் பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் மேல் சென்றது.
சென்னை உள்ளிட்ட சில இடங்களில் மருத்துவமனைகளும் நிரம்பியதால், நோயாளிகள் பல மணி நேரம் வரை ஆம்புலன்ஸ்சிலேயே காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது.

கொரோனா ஊரடங்கு
இதையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதல் இரண்டு வாரங்கள் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வைரஸ் பாதிப்பு குறைந்த பிறகே கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதிலும்கூட கோவை, ஈரோடு போன்ற மேற்கு மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வர நீண்ட காலம் ஆனது. இதனால் அந்தப் பகுதிகளுக்குக் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது செப். 15ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

கேரளாவில் செய்த தவறு
அண்டை மாநிலமான கேரளாவில் பக்ரீத் சமயத்தில், இந்திய மருத்துவ சங்கத்தின் எதிர்ப்பையும் மீறி சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அப்போது உயரத் தொடங்கி கொரோனா பாதிப்பு, ஓணம் பண்டிகைக்குப் பிறகு மோசமானது. ஓணம் சமயத்தில் பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடுவதைத் தடுக்க அம்மாநில அரசு முறையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தத் தவறியதே இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.

கட்டுப்பாடுகள்
கேரளா செய்த தவறில் இருந்து பாடம் கற்ற தமிழ்நாடு, பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி, மேரி மாதா விழாக்கள் உள்ளிட்ட அனைத்து விழாக்களுக்கும் கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும், மத்திய அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றியே இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் தமிழ்நாடு அரசு விளக்கமளித்தது. இருப்பினும், பாஜக, இந்து மக்கள் கட்சி ஆகிய அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
Recommended Video

விநாயகர் சதுர்த்திக்குத் தடை?
தமிழ்நாடு அரசு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு விதித்துள்ள தடையை மீறி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் என்றும் அறிவித்தனர். இது தவிர அனைத்து விதமான விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. இந்துக்களின் முழு முதற்கடவுளான விநாயகரை வழிபட விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்தினர். இதனால் சற்று சலசலப்பு ஏற்பட்ட நிலையில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் குறித்து முதல்வர் சட்டசபையில் விளக்கம் அளித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன் கேள்வி
இன்று சட்டசபையில் பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்," செய்தித்துறை அமைச்சர் நமது முன்னோர்களுக்குச் சிலை வைப்பது குறித்து அறிவித்துள்ளார். அதற்கு வரவேற்பு தெரிவித்துக் கொள்கிறோம். அதேநேரம் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று இந்துக்களின் முழு முதற்கடவுளான விநாயகர் சிலைகளை வணங்க வேண்டும். ஆனால் தமிழ்நாடு அரசு இதற்குத் தடை விதித்துள்ளது' என்றார்.

முதல்வர் விளக்கம்
இதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், " வரும் செப். 30ஆம் தேதி வரை கொரோனா நோய் பரவலைக் தடுக்க பொது இடங்களில் மக்கள் கூடுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது, நீதிமன்றமும் அதைத் தான் குறிப்பிட்டுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் பக்ரீத் மற்றும் ஓணம் பண்டிகை சமயத்தில் மக்கள் ஒன்றுகூடுவதைத் தடுக்க அம்மாநில அரசு தவறியதால் தான், அங்கு கொரோனா பாதிப்பு அதிகரித்தது. தமிழ்நாட்டிலும் கூட கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாகத் தான் உள்ளது.

தடை என நாங்கள் எப்போது சொன்னோம்
இதைக் கருத்தில் கொண்டே மாநிலத்தில் வரும் செப். 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து சமய விழாக்களைக் கொண்டாடவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது விநாயகர் சதுர்த்திக்கும் பொருந்தும். பொது இடங்களில் மட்டுமே விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட அனைத்து மத விழாக்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வீடுகளில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடலாம். அதற்கு எந்தவொரு தடையும் விதிக்கப்படவில்லை. அதேபோல மாநிலத்தில் விநாயகர் சிலைகளைச் செய்யும் 300 மண்பாண்ட தொழிலாளர்களுக்குக் கூடுதலாக 5000 ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும்" என்று தெளிவுபடுத்தினார். இதன் பின்னரே பாஜக உறுப்பினர்கள் அமைதியாகினர்.

கொரோனாவும் வேக்சின்களும்
இந்தியாவில் இதுவரை 72 கோடி பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. அவர்களில் சுமார் 16 கோடி பேருக்கு 2 டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. ஒருபுறம் வேக்சின் போடும் பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தாலும்கூட மறுபுறம் டெல்டா கொரோனா தவிர, லாம்டா, மூ, C 1.2 போன்ற புதிய உருமாறிய கொரோனா வகைகள் தொடர்ந்து தோன்றி வருகிறது. இப்போதுள்ள கொரோனா வேக்சின்கள் தீவிர கொரோனா பாதிப்பையும், உயிரிழப்புகளையும் மட்டுமே தடுக்கிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில்லை. இதனால் வேக்சின் போட்டாலும்கூட பொது இடங்களில் மாஸ்க்குகளை அணிந்து, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.

3ஆம் அலை பாதிப்பு
இந்தியாவில் இப்போது கேரளா மட்டுமின்றி மகாராஷ்டிராவிலும் வைரஸ் பாதிப்பு மெல்ல அதிகரித்து வருகிறது. இது கொரோனா 3ஆம் அலையின் தொடக்கமாக இருக்கலாம் என்றும் இதனால் பொதுமக்கள் உச்சபட்ச கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, இப்போதைய சூழலில் வீட்டில் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அனைத்து மத பண்டிகைகளையும் கொண்டாட வேண்டும் என்றும் அதுவே கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தி 3ஆம் அலை ஏற்படுவதைத் தடுக்க ஒரே வழியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.












Click it and Unblock the Notifications