"இது தான் திமுக அரசு அரசின் அடையாளங்கள்.." கிறிஸ்துமஸ் விழாவில் பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லயோலா கல்லூரியில் நடந்த "அன்பின் கிறிஸ்துமஸ் பெருவிழா-2022" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், சிறுபான்மையினர் நலனிற்காக திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களைப் பட்டியலிட்டார்

சென்னை லயோலா கல்லூரியில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் "அன்பின் கிறிஸ்துமஸ் பெருவிழா-2022" நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக சார்பில் கடந்த 1.5 ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்டார்.

 முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

இந்த கிறிஸ்துமஸ் விழாவை, கிறிஸ்துமஸ் விழா என்று மட்டும் சொல்லாமல் 'அன்பின் கிறிஸ்துமஸ் விழா' என்று இனிகோ இருதயராஜ் குறிப்பிட்டுள்ளார்கள். எந்த விழாவாக இருந்தாலும் அது அன்பின் விழாவாக - அனைவரின் விழாவாக அது அமையும். அந்த வகையில்தான் இனிகோ இருதயராஜ் இந்த விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த எழுச்சியான கிறிஸ்துமஸ் விழாவை அவர் நடத்துகிற நேரத்தில், அதில் என்னையும் தொடர்ந்து 13 ஆண்டு காலமாக அழைத்து அதில் பங்கேற்க வைக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் அவர் அழைக்கிறபோது, நான் மறுப்பேதும் சொல்லாமல் உடனடியாக ஒப்புதல் தந்து வருவதற்குக் காரணம், என்னை உருவாக்கிய என்னுடைய தந்தை நம்முடைய தலைவர் கருணாநிதி எப்படி தட்டாமல், மறுக்காமல் வந்தாரோ, அதைப் பின்பற்றி நானும் வந்துகொண்டிருக்கிறேன் என்பதுதான் உண்மை. அதுமட்டுமல்ல, இது மதத்தின் விழாவாக இல்லாமல் - ஒரு மத நம்பிக்கையாளர்கள் பங்கேற்கக்கூடிய விழாவாக இல்லாமல் அனைத்து மதத்தவரும் பங்கேற்கக்கூடிய வகையில் இந்த விழா நடக்கிற காரணத்தால் இன்றைக்கு எல்லோரும் இந்த விழாவிலே மகிழ்ச்சியோடு பங்கேற்க வந்திருக்கிறோம்.

 கிறிஸ்துமஸ் விழா

கிறிஸ்துமஸ் விழா

இங்கே நீங்கள் பார்க்கிறீர்கள். சூரியநயினார் கோவில் சிவகர யோகிகள் மடத்தின் - மகாலிங்க தேசிக பரமாச்சார்யார் சுவாமிகள், ஆத்தூர் இசுலாமிய கல்விக்கூடத்தைச் சேர்ந்த முகமது இம்ரானுல்லாஹ் பாகவி கலந்து கொண்டுள்ளனர். எனவே இது அன்பின் பெருவிழாவாக நடந்து கொண்டு இருக்கிறது. இதுவே சாட்சி. என்னை இந்த அழைப்பிதழில் சமத்துவ நாயகன் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். நம்முடைய இனிகோ சமத்துவ விழாவாகத்தான் இதை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த ஒரு காரணத்திற்காகவே ஆண்டுதோறும் இது போன்ற விழாக்களில் நான் பங்கேற்பது என்னுடைய கடமையாகவே கருதி இதில் வந்து கலந்து கொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் போதனைகள் பெரும்பாலும் அன்பைப் போதிப்பதாகத்தான் அமைந்திருக்கிறது. "உன்மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக' என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார். மிக எளிமையான வாசகம்தான், ஆனால் அதே அளவு வலிமையான வாசகமாகவும் இது இருக்கிறது. இயேசு கிறிஸ்து பெருமானின் இந்த ஒரு அறிவுரையைப் பின்பற்றினாலே உலகம் எங்கும் அமைதி தவழும்.

 சமத்துவம், சகோதரத்துவம்,

சமத்துவம், சகோதரத்துவம்,

சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, இரக்கம், நீதி, தியாகம், பகிர்தல் ஆகியவற்றை இயேசுவின் போதனைகள் திரும்பத் திரும்பச் சொல்கிறது. இத்தகைய பண்புகள் தனிமனிதரின் குணங்களாக, சமுதாயத்தின் குணங்களாக, இந்த நாட்டின் குணங்களாக, ஏன், இந்த உலகத்தின் குணங்களாக மாற வேண்டும். மக்களுடைய வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் ஒரு தாய் மக்களாகக் கருதும் அன்பு உள்ளம் கொண்டதாக அரசுகள் இயங்க வேண்டும். திராவிட முன்னேற்றக் கழக அரசு அப்படித்தான் இயங்கி வருகிறது. இவை அனைத்தையும் உள்ளடக்கியதுதான் திராவிட மாடல் ஆட்சி என்பது, அதுதான் இன்றைக்கு இந்த ஆட்சியினுடைய தத்துவம்! குறிப்பாக சிறுபான்மையின மக்களுடைய நலனில் எப்போதும் அக்கறை செலுத்தி வரும் அரசு நம்முடைய கழக அரசு என்பதை நீங்களெல்லாம் நன்கு அறிவீர்கள்.

 கருணாநிதி

கருணாநிதி

1989-ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நல ஆணையத்தை அமைத்தவர் கருணாநிதி.. 1990-ஆம் ஆண்டு அப்துல் ஜாபர் தலைமையில் சிறுபான்மையினர் நலக்குழுவை அமைத்தவர் கருணாநிதி.. 1999-ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் அமைத்தவரும் கருணாநிதி.. 2007-ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நல இயக்ககம் அமைத்தவரும் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த நம்முடைய கருணாநிதி.. 2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் கொண்டுவந்தவரும் முதலமைச்சராக இருந்த முதல்வர் கருணாநிதி தான்! அந்த வரிசையில்தான் இப்போதும் நாம் செயல்பட்டு வருகிறோம். உபதேசியார் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் விடுதி மாணவ மாணவியர்க்கு சிறுபான்மையினர் பண்டிகை நாட்களில் சிறப்பு உணவு வழங்கப்பட இருக்கிறது. சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் புதிய பணியிடங்களுடன் அலுவலகம் அமைக்கப்பட இருக்கிறது.

 சிறுபான்மையினர் நலன்

சிறுபான்மையினர் நலன்


கரூர், மதுரை, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் ஒரு கிறிஸ்தவ உதவி சங்கம் கூடுதலாகத் துவங்கிட நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெருசலேமுக்கு புனித பயணம் செல்வதற்கு அருட் சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் அதிக கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தச் சாதனைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் என்ன எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்னால், இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறாயே, இனிகோ பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்ன அந்த மூன்று கோரிக்கைகள் என்ன? அதற்கு ஏதாவது சொல் என்று நீங்கள் சொல்வது என்னுடைய செவிகளில் விழாமல் இல்லை. அதற்கு பதிலை அவரே சொல்லியிருக்கிறார். இங்கே பேசிய பலரும் குறிப்பிட்டுச் சொல்லி, அதில் இருக்கக்கூடிய பிரச்சனைகள், நிதி ஆதாரம், இருக்கக்கூடிய சூழ்நிலை, நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள், அதைப் பற்றியெல்லாம் அவர்கள் விளக்கமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். இருந்தாலும், முதலமைச்சருடைய வாயிலிருந்து என்ன வருகிறது என்று நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறீர்கள், எனக்குப் புரியாமல் இல்லை.

 ஆதிதிராவிடர் கிறிஸ்துவர் கோரிக்கை

ஆதிதிராவிடர் கிறிஸ்துவர் கோரிக்கை

முதல் கோரிக்கை - சிறுபான்மைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பானது, அதற்குப் பிறகு ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அது நீதிமன்றத்தில் இருக்கிறது. நீங்கள் ஒன்றை மறந்துவிடக் கூடாது. கடந்த கழக ஆட்சிக்காலத்திலே உங்களுக்காக அதனை நிறைவேற்றித் தந்தவன் தான் இந்த ஸ்டாலின். அதை விட்டுவிடுவோமா? நான் விட்டுவிட மாட்டேன். அது உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நான் கருதுகிறேன். அதேபோல் இரண்டாவது கோரிக்கை - ஆதிதிராவிடர் கிறிஸ்துவர் தொடர்பான கோரிக்கை நீதிமன்றத்தில் இருக்கிறது. ஆனால், 2006-2011 ஆட்சிக்காலத்தில், ஆதிதிராவிட மக்களுக்கு என்ன சலுகை வழங்கப்பட்டதோ, அதை ஆதிதிராவிட கிறிஸ்துவர்களுக்கு வழங்கிய ஆட்சி என்பதையும் நான் இந்த நேரத்தில் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.

 உதவி தொகை

உதவி தொகை

மூன்றாவது கோரிக்கை - உதவித் தொகை நிறுத்தப்பட்டிருக்கிறது, அது தொடர்பான கோரிக்கை எடுத்துவைத்து, அதை இன்றைக்கு ஒன்றிய அரசுதான் நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரு நிலை இருப்பதையும் நம்முடைய இனிகோ எடுத்துச் சொன்னார்கள். ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து நாம் எழுதிக் கொண்டிருக்கிறோம், காத்திருப்போம். இவ்வளவு நாள் காத்திருந்தீர்கள், இன்னும் சிறிது நாட்கள் காத்திருக்க மாட்டீர்களா? ஒன்றிய அரசு அதை முறையாகச் செய்வதற்கு முன்வரவில்லை என்று சொன்னால், நான் உறுதியோடு சொல்கிறேன், மாநில அரசு எந்த வகையில் அதற்காக உதவி செய்ய முடியுமோ, அந்த உதவியை நிச்சயமாகப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்று இந்த நேரத்தில் நான் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

 கொரோனா காலம்

கொரோனா காலம்

ஆகவே மீண்டும், மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புவது ஜெருசலேம் நகருக்கு புனித பயணம் செல்வதற்கு அருட் சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கக்கூடிய மானியம் எப்படி உயர்த்தி வழங்கப்பட்டதோ, சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் அதிக கடன்கள் எப்படி வழங்கப்பட்டு வருகின்றனவோ, இந்தச் சாதனைகள் நிச்சயமாக தொடரும், தொடரும் என்பதை மீண்டும், மீண்டும் உங்களுக்கு இந்த நேரத்தில் நினைவுபடுத்தி. இந்த அரசாங்கத்தின் அடையாளம் என்பது ஒற்றைக் கையெழுத்தில் கோடிக்கணக்கான மகளிருக்கு இலவசப் பேருந்து பயணத்தை ஏற்பாடு செய்ததுதான்! இந்த அரசாங்கத்தின் அடையாளம் என்பது கொரோனா காலத்தில் கல்வியை நிறுத்திய 2 லட்சம் பிள்ளைகளை மீண்டும் பள்ளிக்கூடங்களுக்கு அழைத்து வந்ததுதான்.

 இது தான் திமுக அரசு

இது தான் திமுக அரசு

இந்த அரசாங்கத்தின் அடையாளம் என்பது ஏழை எளிய மக்களை நோக்கி மருத்துவம் சென்றதுதான். இந்த அரசாங்கத்தின் அடையாளம் என்பது விபத்தில் சிக்கிய பல்லாயிரக்கணக்கானவரை நம்மைக் காக்கும் 48 திட்டத்தினால் அவர்களுக்கு உயிரைக் காத்ததுதான். கடலில் கால் நனைக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தோடு இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுப்பாதை உருவாக்கி அவர்களது மனதை ஈரமாக்கியதில்தான் இந்த ஆட்சியின் அடையாளம் இருக்கிறது. இலங்கை தமிழரா, திருநங்கையரா, நரிக்குறவரா, விளிம்புநிலை மக்களா, சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளா - அனைவரையும் அரவணைக்கக்கூடிய அரசுதான் இந்த அரசு. அதாவது கருணை வடிவான கருணாநிதி அரசு இது. அன்பு வடிவான அரசாக இந்த அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் இந்த அரசை மனம் திறந்து நீங்கள் எல்லாம் பாராட்டிக் கொண்டிருக்கிறீர்கள்" என்று அவர் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+