கோமியம் அமிர்த நீர்.. மருந்து கட்டுப்பாடு அமைப்புகளில் சான்றிதழ் பெறுவீர்களா? செல்வப்பெருந்தகை சவால்
சென்னை: மாட்டின் சிறுநீரான கோமியம் மக்கள் பயன்பாட்டுக்கு உகந்தது என்று சென்னை ஐஐடி காமகோடி மற்றும் அமிர்த நீர் என்று கூறிய பாஜக தலைவர்கள் மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ் பெறுவார்களா என்ற தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வபெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
மாட்டின் சிறுநீரான கோமியத்தில் கிருமி நாசினிகள் உள்ளிட்ட பல நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளிட்ட மருத்துவ குணம் நிறைந்துள்ளது என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசினார். சென்னை ஐஐடி காமகோடியின் பேச்சு சர்ச்சையான நிலையில், அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

ஆனால் காமகோடியின் பேச்சிற்கு பாஜக தலைவர்களான அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் ஆதரவு கூறினர். அதிலும் தமிழிசை செளந்தரராஜன், ஆயுர்வேதத்தில் ஆராய்ச்சி பூர்வமாக கோமியம் அமிர்த நீர் என்று எழுதப்பட்டுள்ளது. 80 வகையான நோய்களுக்கு கோமியத்தை பயன்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது.
என் உணவு, என் உரிமை என்று நீங்கள் பேசுகிறீர்களே.. என் மருந்து, என் உரிமை என்று நாங்கள் சொல்கிறோம், என்று தெரிவித்தார். இதனால் தமிழக அரசியல் கோமியம் குறித்த விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து விவாதத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது.
அதில், உலகம் முழுவதிலும் தொடர்ந்து விவாத பொருளாக மாறி வருகிற பசு மாட்டின் கழிவுகளான சிறுநீர், சாணம், மனிதர்கள் பயன்படுத்துவதற்கு உகந்ததா ? நாலடியாரில் உள்ள "கல்வி கரையில; கற்பவர் நாள்சில; மெல்ல நினைக்கின் பிணிபல; - தெள்ளிதின் ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து" என்ற வரிகளை எழுதி இருக்கிறார்.

இதற்கு, சங்க இலக்கியங்களில் ஒன்றான நாலடியாரில் கல்வி கரையில்லாதது மற்றும் எல்லையற்றது. கல்வியைக் கற்பது என்பது அன்னப்பறவை நீரிலிருந்து பாலை பிரிப்பது போல கற்றவர்கள் பயனற்ற வற்றிலிருந்து பிரித்து, உண்மையை படிக்க வேண்டும் என்ற கூற்றிக்கேற்ப கோமியம் மருத்துவ குணம் நிறைந்துள்ளது என்று கூறிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, கோமூத்திரம் அமிர்த நீர் என்று கூறிய பாஜக தலைவர்களும் சிறுநீர், மனிதர்கள் பயன்படுத்துவதற்கு உகந்தது சான்றிதழ் பெறுவார்களா?
UKMHRA - UNITED KINGDOM THE MEDICINES AND HEALTHCARE PRODUCTS REGULATORY AGENCY, USFDA - UNITED STATES FOOD AND DRUG ADMINISTRATION, DCGI- DRUGS CONTROLLER GENERAL OF INDIA ஆகிய இந்த அமைப்புகளிலிருந்து சான்றிதழ் பெறுவார்களா? என்று உலக மக்கள் அறிய விரும்புகிறார்கள் என்று பதிவிட்டுள்ளார். இதனால் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி மற்றும் பாஜக தலைவர்கள் சான்றிதழ் பெற்று தங்களின் கூற்று சரி என்பதை நிரூபிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications