தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா! ஆனால் சென்னை உட்பட 3 மாவட்டங்களில் 100ஐ தாண்டிய பாதிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வருகிறது.
தமிழ்நாட்டில் ஓமிக்ரான் பாதிப்பு கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்டது. இருப்பினும், நல்வாய்ப்பாக ஓமிக்ரான் கொரோனா தீவிர பாதிப்பு எதையும் ஏற்படுத்தவில்லை.
அதன் பின்னர் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்த வந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு திடீரென அதிகரிக்கத் தொடங்கியது.

தினசரி கொரோனா
இந்தச் சூழலில், கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போது மீண்டும் குறையத் தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 35,670 பேருக்கு கொரோனா டெஸ்டிங் செய்யப்பட்டு உள்ளது. அதில் 2033 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. நேற்று 2093 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், இன்று வைரஸ் பாதிப்பு மேலும் குறைந்து உள்ளது.

குணமடைந்தோர் எண்ணிக்கை
இதன் மூலம் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,28,384ஆகி உள்ளது. அதேபோல இன்று மட்டும் 2,383 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து தமிழ்நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,74,199ஆக உயர்ந்து உள்ளது.

உயிரிழப்பு
அதேபோல மாநிலத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று 16,504ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்கள் இன்று 16,153ஆக குறைந்து உள்ளது. மேலும், கொரோனா பாதிப்பு காரணமாக இன்று விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட கொரோனா உயிரிழப்புகள் 38,032ஆக அதிகரித்து உள்ளது.

மாவட்ட வாரியான தகவல்
தினசரி பாதிப்பில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது. தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் மட்டும் தினசரி கொரோனா பாதிப்பு 100ஐ தாண்டி உள்ளது. அதிகபட்சமாகச் சென்னையில் 466 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 217 பேருக்கும் கோவையில் 187 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. தமிழ்நாட்டில் பாசிட்டிவ் விகிதம் 6ஆக உள்ளது. அதிகபட்சமாக நீலகிரியில் பாசிட்டிவ் விகிதம் 12.6ஆக உள்ளது.












Click it and Unblock the Notifications