ஷாக் அடிக்கும் வேகத்தில் பரவும் கொரோனா.. இந்த 3 மாவட்டங்களில் அச்சமூட்டும் பாசிட்டிவ் விகிதம்!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மின்னல் வேகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக 3 மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதம் அச்சமூட்டும் அளவுக்கு அதிகமாக உள்ளது,
மற்ற மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் தினசரி கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே இது குறித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் கூடுதல் கட்டுப்பாடுகள் உடன் கொரோனா ஊரடங்கு வரும் ஜன. 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும் கூட மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தினசரி கொரோனா பாதிப்பு
இந்நிலையில், நேற்று 8981 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினசரி பாதிப்பு 10,978ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட சுமார் 1997 அதிகம் ஆகும். மொத்தம் 1.39 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், வெளிநாடுகளில் இருந்து திரும்பிய இருவர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பிய 44 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இதையெல்லாம் சேர்ந்து ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் 10,978 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

பாசிட்டிவ் விகிதம்
மாநிலத்தில் பாசிட்டிவ் விகிதம் அச்சமூட்டும் அளவுக்குத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு கட்டத்தில் பாசிட்டிவ் விகிதம் ஒன்று கீழ் சென்றிருந்தது. ஆனால், இப்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. நேற்றைய தினம் பாசிட்டிவ் விகிதம் 5.4ஆக இருந்த நிலையில், இன்று அது 6.6ஆக உயர்ந்துள்ளது. ஓமிக்ரான் கேஸ்களின் எண்ணிக்கையில் மாற்றமில்லை. இதுவரை ஓமிக்ரான் உறுதியான 117 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை ஒரே நாளில் சுமார் 9 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. நேற்று ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 30,817ஆக இருந்த நிலையில், இன்று அது 40,260ஆக அதிகரித்துள்ளது.. மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 1525 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 27,10,288 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்.

உயிரிழப்பு
நல்வாய்ப்பாக கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 10 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். அவர்களில் 5 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 5 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். அதிகபட்சமாகச் சென்னையில் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் தலா இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில் 36,843 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
Recommended Video

மாவட்ட ரீதியாகப் பாதிப்பு
மாவட்ட ரீதியான பாதிப்பில் தலைநகர் சென்னை தான் மோசமான நிலையில் உள்ளது. தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 5098 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையைத் தொடர்ந்து செங்கல்பட்டில் 1332 பேருக்கும் திருவள்ளூரில் 591 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 3 மாவட்டங்களில் தான் பாசிட்டிவ் விகிதம் மோசமாக உள்ளது. அதிகபட்சமாகத் தலைநகர் சென்னையில் பாசிட்டிவ் விகிதம் 14.2ஆக உள்ளது. அதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 12.9ஆகவும் திருவள்ளூரில் 10.9ஆகவும் பாசிட்டிவ் விகிதம் உள்ளது.












Click it and Unblock the Notifications