செம ஷாக்.. தமிழகத்தில் 11 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு.. சிறார்கள் மத்தியில் படுவேகம்
சென்னை: தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், சிறார்களுக்கு மத்தியிலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கடந்த சில தினங்களாகவே வேகமாகப் பரவிவருகிறது. இதைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல புதிய கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது.
மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவல் தற்போது 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது. குறிப்பாக 12 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு ஏற்படும் பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னையில் உச்சம்
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தற்போது நிலைமை மீண்டும் மோசமாகியுள்ளது. சென்னையில் தொடர்ந்து நான்காம் நாளாக வைரஸ் பாதிப்பு மூவாயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சென்னையில் 3750 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 29,256 பேர் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2440 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு
ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11,681 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 70 பேர் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள். இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,25,059ஆக உயர்ந்துள்ளது.

சிறார்கள் மத்தியில் வேகமெடுக்கும் கொரோனா
தமிழகத்தில் சிறார்கள் மத்தியில் ஏற்படும் கொரோனா பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி 128 சிறார்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. மெல்ல உயர்ந்து வந்த இந்த எண்ணிக்கை தற்போது 400ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 வயதிற்குட்பட்ட 436 சிறார்களுக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Array
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,071 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக தற்போது வரை 9,27,440 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மாநிலத்தில் ஒரே நாளில் கொரோனா உயிரிழப்பும் 53ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,258ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 84,361ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன என்றும் சுகாதார துறை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications