'நிம்மதி'.. அதிவேகமாக குறையும் கொரோனா பரவல்.. 1300க்கு கீழ் சென்ற தினசரி வைரஸ் பாதிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1289 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல கொரோனா பாசிட்டிவ் விகிதமும் தொடர்ந்து 1க்கு கீழாகவே உள்ளது.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கடந்த மே மாதம் உச்சம் தொட்டது. இதையடுத்து வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதன் பின்னரே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியது. இடையில் ஊரடங்கு தளர்வுகள் காரணமாக சில நாட்கள் வைரஸ் பாதிப்பு அதிகரித்தாலும், மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனா தொடர்ந்து குறைந்தே வருகிறது.

தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் இன்றும் தொடர்ந்து வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1.37 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 1289 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் ஒட்டு மொத்தம் 26,80,857 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாநிலத்தின் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் கடந்த சில நாட்களாகவே 0.9% ஆகவே தொடர்கிறது. அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் பாசிட்டிவ் விகிதம் 2.2%ஆகவும் கிருஷ்ணகிரியில் 2%ஆகவும் உள்ளது. தலைநகர் சென்னையில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் மாநில சராசரியைவிடக் குறைவாக 0.8%ஆக உள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்
கொரோனா உயிரிழப்புகளைப் பொறுத்தவரை இன்று சிகிச்சை பெற்று வந்தவர்களில் மொத்தம் 18 உயிரிழந்துள்ளனர். அவர்களில் 10 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 8 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். அதிகபட்சமாக்கத் தலைநகர் சென்னையில் 4 பேரும் நீலகிரி, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் தலா 2 பேரும் பலியாகியுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 35,814 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
தமிழ்நாட்டில் ஆக்டிவ் கேஸ்கை பொறுத்தவரைத் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று மாநிலத்தில் 15,992 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 15842 ஆக மேலும் குறைந்துள்ளது. மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 1421 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், இதுவரை தமிழ்நாட்டில் 26,29,201 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு
மாவட்ட வரியான பாதிப்பில் இன்று சென்னையில் தான் அதிகமாக உள்ளது. தலைநகர் சென்னையில் இன்று மொத்தம் 164 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல கோவையில் 137 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டில் 104 பேருக்கும், ஈரோட்டில் 78 பேருக்கும் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. சென்னை, கோவை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மட்டுமே இன்று வைரஸ் பாதிப்பு 100ஐ கடந்துள்ளது.












Click it and Unblock the Notifications