ஷாக்..! கோவையில் மீண்டும் 200 கடந்த தினசரி பாதிப்பு.. தமிழ்நாட்டில் இன்று 1562 பேருக்கு கொரோனா..
சென்னை: இன்று தமிழ்நாட்டில் 1562 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஆக்டிவ் கேஸ்களும் 16,478ஆக குறைந்துள்ள நிலையில், கோவையில் தற்போது தினசரி வைரஸ் பாதிப்பு மீண்டும் 200ஐ கடந்துள்ளது.
தமிழ்நாட்டில் மே மாதம் முதலே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாகவே பிற மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்த போதிலும் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள்ளேயே இருந்து வந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் தற்போது தளர்வுகளுடன் கூடிய வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், வைரஸ் பாதிப்பு கட்டுக்குள்ளேயே தொடர்ந்து இருந்து வருகிறது.

தினசரி கொரோனா பாதிப்பு
இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று 1562 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இன்று மாநிலம் முழுவதும் 1,60,523 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் ஐக்கிய அமீரகத்தில் இருந்து திரும்பிய ஒருவர் உட்பட மொத்தம் 1562 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் மொத்தம் 26,17,943 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாசிட்டிவ் விகிதம்
அதேபோல மாநிலத்தின் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் 1 என்ற அளவிலேயே இருக்கிறது. மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பதே கொரோனா பாசிட்டிவ் விகிதம் என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மாவட்ட ரீதியாக பார்க்கும் போது இன்று எங்கும் பாசிட்டிவ் விகிதம் 2ஐ கடக்கவில்லை. அதிகபட்சமாகக் கோவை மாவட்டத்தில் 1.8%, மயிலாடுதுறை மாவட்டம் 1.7%, நாமக்கல் மாவட்டத்தில் 1.6% ஆக கொரோனா பாசிட்டிவ் விகிதம் உள்ளது. தலைநகர் சென்னையில் மாநில சராசரியைவிடக் குறைவாக 0.8%ஆகவே தொடர்கிறது.

கொரோனா உயிரிழப்புகள்
இன்று கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மொத்தம் 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 13 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 7 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இன்று உயிரிழந்தவர்களில் 5 பேர் எவ்வித இணை நோய்களையும் கொண்டிருக்காதவர்கள், 2 பேர் 50 வயதுக்குக் குறைவானவர்கள் ஆகும். அதிகபட்சமாக இன்று கோவையில் 5 பேரும், சென்னை, திண்டுக்கல், நீலகிரி, திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 34,961 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
தமிழ்நாட்டில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று ஆக்டிவ் கேஸ்கள் 16,620ஆக இருந்த நிலையில், இன்று அது 16,478ஆக மேலும் குறைந்துள்ளது. இது தவிரக் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் மொத்தம் 1,684 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், இதுவரை தமிழ்நாட்டில் 25,66,504 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு
மாவட்ட வாரியான பாதிப்பில் இன்று கோவையில் தான் அதிகமாக உள்ளது. அங்கு கடந்த சில நாட்களாகவே வைரஸ் பாதிப்பு 200க்கும் கீழாகவே இருந்த நிலையில், இன்று அங்கு வைரஸ் பாதிப்பு மீண்டும் 200ஐ கடந்துள்ளது. கோவையில் இன்று 215 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து சென்னையில் 166 பேருக்கும், ஈரோட்டில் 132 பேருக்கும் தஞ்சையில் 110 பேருக்கும் செங்கல்பட்டில் 103 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்த 5மாவட்டங்களில் மட்டுமே இன்று வைரஸ் பாதிப்பு 100ஐ கடந்துள்ளது.












Click it and Unblock the Notifications