மிக விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்? அரசியல் கட்சிகளுடன் ஜன. 19-ல் தேர்தல் ஆணையம் ஆலோசனை
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைச் சுமுகமாக நடத்துவது குறித்து வரும் ஜன.19ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்குக் கடந்த அக்டோபர் மாதம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதில் பெரும்பாலான இடங்களில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே வென்றன.

மாவட்ட கவுன்சிலராக தேர்தலில் மொத்தமுள்ள 138 இடங்களில் திமுக கூட்டணி 138 தன்வசப்படுத்தியது. அதேபோல ஒன்றிய கவுன்சிலர் பதவிகளிலும் 1021 இடங்களில் திமுக கூட்டணி வென்றது. இதில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளால் பெரியளவில் வெல்ல முடியவில்லை.
இதே வேகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தாண்டு பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக தேர்தலை நடத்த வேண்டும் என்பதே திமுகவின் விருப்பம்.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைச் சுமுகமாக நடத்துவது குறித்து வரும் ஜன.19ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சாதாரணத் தேர்தல்களைச் சுமுகமாக நடத்துவது குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் 19.01.2022 அன்று முற்பகல் 11.30 மணிக்குத் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications