தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா?.. ஆம்னி பஸ்ஸில் அதிக கட்டணமா?.. இந்த நம்பரை நோட் பண்ணுங்க மக்களே!
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்களது சொந்த ஊர்களுக்குப் புறப்பட மக்கள் தயாராகி வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிப்பதற்கான எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தீபாவளி என்றாலே கொண்டாட்டம்தான். புத்தாடை, பட்டாசு, இனிப்பு, சொந்த ஊர், அசைவ விருந்து என களைகட்டும். தீபாவளி பண்டிகை நடப்பு ஆண்டில் வரும் அக்டோபர் 31 தேதியன்று கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. வியாழக்கிழமை அன்று இந்த முறை தீபாவளி வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

எனவே, இந்த முறை தீபாவளிக்கு வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது. தீபாவளிக்காக பொதுமக்கள் பலரும் ஷாப்பிங்கில் இறங்கியுள்ளனர். நகரப் பகுதிகளில் தீபாவளி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக வெளியூர்களில் தங்கி இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி என பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு புறப்படத் தயாராகி வருகின்றனர். பொதுவாக பண்டிகைக் காலங்களில் ஆண்டுதோறும் பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தீபாவளியையொட்டி 14 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து 11,176 பேருந்துகள் அக்டோபர் 28 முதல் 30 ஆம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும். பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. அதேபோல, சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 2,910 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. அரசுப் பேருந்துகள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் பலர் ஆம்னி பேருந்துகளிலும் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம்.
ஆனால், பண்டிகைக் காலங்களைப் பயன்படுத்தி சில நிறுவனங்கள் அதிகபட்ச கட்டணம் வசூலிப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாவார்கள். இந்நிலையில், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க உதவி எண்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தீபாவளிக்காக கடந்த சில மாதங்களாகவே ரயில்கள் மற்றும் அரசு சார்பில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவுகள் முடிவடைந்துவிட்டன.
அதேபோல, ரயில்வே நிர்வாகம் அறிவிக்கும் சிறப்பு ரயில்களிலும் ராக்கெட் வேகத்தில் டிக்கெட்டுகளை பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ள நிலையில், இந்தப் பேருந்துகளை ஒருங்கிணைக்கவும், பயணிகளுக்கு உதவும் வகையிலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
பேருந்து சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் இந்த கட்டுப்பாட்டு அறைக்கு 94450 14436 என்ற எண்ணில் மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 18004256151, 04424749002, 04426280445, 04426281611 ஆகிய எண்களில் பயணிகள் புகார் தெரிவிக்கலாம் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications