அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு! அய்யோ எவ்வளவு பெரிய மைதானம்.. பொங்கலுக்கு அதகளப்படுத்தும் தமிழக அரசு
சென்னை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கிராமத்தில் பிரம்மாண்டமான மைதானம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் வரும் பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றுகிறது. இந்த போட்டிகள் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடக்கிறது. இதற்காக உடல் தகுதி தேர்வு, விண்ணப்பிக்கும் நடைமுறை எல்லாம் நடத்தப்படும்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜல்லிகட்டுக்கு தடை விதித்த நிலையில் மெரினாவில் புரட்சி போராட்டம் நடத்தப்பட்டு தமிழர்களின் வீர விளையாட்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த விளையாட்டுகள் உலகப்புகழ் பெற்றவை.
அலங்காநல்லூர், அவணியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளை காண வெளிமாநிலங்களில் இருந்து பலர் வந்து கலந்து கொள்வது வழக்கம். அது போல் டிவிகளிலும் நேரலை ஒளிபரப்பப்படுகிறது. இத்தனை புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளை காண வரும் போது இட நெருக்கடியால் பார்வையாளர்கள் கடும் அவதிப்படுகிறார்கள்.
இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தகராறும் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக நிரந்தரமான பிரம்மாண்ட அரங்கு ஒன்று அமைக்கப்படும் என சட்டசபையில் அறிவித்திருந்தார். அந்த வகையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் 3,700 பேர் அமரும் வகையில் மிகப் பெரிய ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படுகிறது.
தற்போது 70 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் வரும் டிசம்பருக்குள் பணிகளை முழுமையாக முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மைதானம், நுழைவு வாயில், அருங்காட்சியகம், காளைகளுக்கான கொட்டகை, வாடிவாசல், காளைகள் நிற்கும் இடம், கால்நடை மருந்தகம், மாடுபிடி வீரர்களின் உடல் பரிசோதனை கூடம், காளைகளை பதிவு செய்யும் மையம். வீரர்களுக்கான உடைமாற்றும் அறை, மழை நீர் வடிவால் அமைப்பு, துணை சுகாதார மையம், விஐபிகளுக்கான இருக்கைகள் என அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்படுகிறது.
இந்த மைதானம் ரூ.44 கோடி செலவில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அமர்ந்து விளையாட்டை ரசிக்கும் அளவுக்கு உள்ளது. இது கிரிக்கெட் மைதானம் போல் கட்டப்படுகிறது. வரும் பொங்கல் பண்டிகை முதல் இந்த போட்டிகள் இங்கு நடத்தப்படுகிறது. அலங்காநல்லூரில் இருந்து கீழக்கரையில் அமைந்துள்ள இந்த மைதானத்திற்கு பார்வையாளர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் புதிய சாலைகளும் அமைக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications