"மார்ச் 8" மகளிர் தினத்தன்று குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 அறிவிப்பு? தமிழக அரசின் பலே திட்டம்
சென்னை: தமிழ்நாட்டில் மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பை மார்ச் 8ம் தேதி வெளியிட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகவும், விரைவில் கணக்கெடுப்பு பணிகளை முடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைத்ததில் இருந்து தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் ஏராளமானவை நிறைவேற்றப்பட்டிருந்தாலும், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்வியே மக்கள் மத்தியில் உள்ளது.
ஆட்சியமைத்து 19 மாதங்கள் கடந்தும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் வாக்குறுதி குறித்த அறிவிப்பு வெளியாகாததால், எதிர்க்கட்சிகளும் அந்த வாக்குறுதியை முன்வைத்தே தமிழக அரசை விமர்சித்து வருகின்றனர்.

மகளிர் உரிமைத் தொகை
இதனிடையே தமிழக அரசின் நிதி பற்றாக்குறை காரணமாக குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் தாமதமாகி வருவதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்த முடியாது என தெரிந்தே திமுக மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்க தொடங்கின.

பிடிஆர் தகவல்
ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக தேர்தலின் போது அளிக்க மகளிர் உரிமைத் தொகை வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்திருந்தார். பின்னர் சில வாரங்களுக்கு முன், மகளிருக்கு உரிமைத் தொகைத் வழங்கும் திட்டம் தொடர்பான கணக்கெடுப்பு பணி 85 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. 2023 பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிவிப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.

சர்வதேச மகளிர் தினம்
இந்த நிலையில் ஜனவரி 4ம் தேதி நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் கணக்கெடுப்பு பணிகள் முடிவுக்கு வரும் சூழலில், சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி தமிழக அரசு குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தல்
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், திமுகவின் முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம், மாணவிகளுக்கான புதுமைப் பெண் திட்டம் என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ள நிலையில், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்த தமிழக அரசு தீவிரமாக இருப்பது மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications