சூரிய ஆற்றல் மூலம் இலவச மின்சாரம்! மகிழ்ச்சியில் விவசாயிகள்.. தமிழ்நாடு அரசின் மாஸ் அறிவிப்பு
சென்னை: சூரிய ஆற்றலில் இயங்கும் வகையில் 5000 விவசாய மின் இணைப்புகளை, சோதனை அடிப்படையில் மாற்றி அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி விவசாய நிலங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை அவர்கள் அரசுக்கும் விற்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வேளாண் தொழிலுக்கு மின்சாரம் இன்றியமையாததாகும். ஆனால் தமிழ்நாட்டின் மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதால் கிராமப்புறங்களில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் வேளாண் தொழில் சில இடர்பாடுகளை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில், இப்பிரச்னையை தீர்க்க மாற்று யோசனை ஒன்றை தமிழ்நாடு அரசு முன்வைத்திருக்கிறது. அதாவது, சூரிய ஆற்றலில் இயங்கும் வகையில் 5000 விவசாய மின் இணைப்புகளை, சோதனை அடிப்படையில் மாற்றி அமைப்பதுதான் அந்த யோசனை.

இதன் மூலம் பயன்பாடு போக மீதமுள்ள மின்சாரத்தை விவசாயிகள் அரசுக்கு விற்கவும் முடியும். இந்த மின்சார உற்பத்திக்கு தேவையான உபகரணங்களை வாங்க பயனாளிக்கு 30% நிதியை ஒன்றிய அரசும், 30% நிதியை மாநில அரசும் வழங்குகிறது. மீதமுள்ள 40% நிதி டான்ஜெட்கோ உதவியுடன் வங்கிக்கடன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தற்போது அரசாணையையும் வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே, இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டமன்றத்தில் விரிவாக பேசியிருந்தார்.
அதாவது தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் சூரிய ஒளி ஆற்றல் அதிகமாக உள்ளதால் அங்கு அதிக அளவில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவுவதற்கு வசதியாக புதிய 400 கிலோ வோல்ட், 230 கிலோவோல்ட், 110 கிலோவோல்ட் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில் இன்று சூரிய ஆற்றலில் இயங்கும் வகையில் 5000 விவசாய மின் இணைப்புகளை, சோதனை அடிப்படையில் மாற்றி அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. எதிர்காலத்தில் சூரிய ஆற்றலை அதிக அளவில் பயன்படுத்த உலக நாடுகள் திட்டமிட்டுள்ளன. எனவே தமிழ்நாடும் இதற்கான முன்னேற்பாடுகளை இந்த சோதனை முயற்சி மூலம் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications