எம்எல்ஏ-க்கள் வறுமையில் இருக்கோம்.. எங்களுக்கும் கார் கொடுங்கள்.. பாமக எம்எல்ஏ சதாசிவம் கோரிக்கை!
சென்னை: சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் வறுமையில் இருப்பதால், அவர்களுக்கு கார் வழங்க வேண்டும் என்று பாமக எம்எல்ஏ சதாசிவம் கோரிக்கை வைத்துள்ளார். நகராட்சியில் 500 வாக்குகள் வாங்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு கூட அரசு தரப்பில் கார் வழங்கப்படுவதாக கூறிய சதாசிவம், 65 கிமீ-க்கு மேல் தங்கள் தொகுதியை சுற்றி வர வேண்டிய எம்எல்ஏ-க்களுக்கு கார் வழங்கப்படுவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று காலை வக்ஃபு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கருப்பு பேட்ஜ் அணிந்தனர். அதேபோல் வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம் எழுப்ப, அதனை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-க்கள் பின் தொடர்ந்தனர்.

இதனை கண்டித்து பாஜக எம்எல்ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து சட்டசபையில் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. பால்வளத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது அமைச்சர் ராஜ கண்ணப்பன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக ரூ.10 கோடி மதிப்பீட்டில் பால் மற்றும் பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரிக்க 500 ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தொகுதி சார்ந்த பிரச்சனைகளை எம்எல்ஏ-க்கள் அமைச்சர்களிடம் கேட்டனர். அப்போது பாமக எம்எல்ஏ சதாசிவம் முன்வைத்த கோரிக்கை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம் பேசுகையில், நகராட்சியில் 500 வாக்குகள் வாங்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு கூட அரசு தரப்பில் கார் அளிக்கப்படுகிறது.
ஆனால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவதில்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதியில் 65 கிமீ சுற்றி வர வேண்டியுள்ளது. பல சட்டமன்ற உறுப்பினர்கள் வறுமையில் இருக்கின்றனர். எனவே அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதற்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
அதில், எல்லோருக்கும் கார் வேண்டுமென்றால், நிதி அமைச்சர் கிட்டதான் கேட்க வேண்டும்.. அவர்கிட்ட போய் கேளுங்க என்று பதில் அளித்தார். இதற்கு பாமக எம்எல்ஏ சதாசிவம், நிதியமைச்சருக்கு அரை மனசு தான் இருக்கு.. ஆனால் முதலமைச்சருக்கு முழு மனசும் இருக்கு.. அதனால் அவரிடம் கோரிக்கை வைக்கிறோம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications