இன்னைக்கு சாவர்க்கர் பிறந்தநாள்.. அவர் எவ்வளவு திறமைசாலி தெரியுமா? புகழ்ந்து தள்ளிய ஆளுநர் ரவி
சென்னை: மறைந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான சாவர்க்கரின் பிறந்தநாளை முன்னிட்டு ஆளுநர் ரவி அவரது திறமைகளை பட்டியலிட்டு ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டு இருக்கும் பதிவில், "நம் நாட்டின் சுதந்திரத்துக்கு சொல்ல முடியாத துன்புறுத்தல்களை தாங்கிக்கொண்டவர் சாவர்க்கர். ஆங்கிலேயர்களின் சித்தரவதைகளை அனுபவித்த தொலைநோக்கு சிந்தனை கொண்ட தேசியவாதி.

வீர சாவர்க்கரின் பிறந்தநாளான இன்று அவருக்கு நன்றியுள்ள தேசம் பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறது. சாவர்க்கர் ஒரு சிறந்த எழுத்தாளரும், சீர்திருத்தவாதியும், சிந்தனையாளரும் ஆவார். அவரது வளமான மரபு, தற்சார்பு இந்தியாவை உருவாக்க நம்மை ஊக்குவிக்கும்." என்று பதிவிடப்பட்டு இருக்கிறது.
தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டு இருக்கும் புதிய நாடாளுமன்றத்தை திறக்க இந்த நாளை தேர்வு செய்து இருப்பது சாவர்க்கர் பிறந்தநாள் என்ற காரணத்தினால்தான் என்று கூறப்பட்டு வருகிறது. சாவர்க்கர் பிறந்தநாளன்று இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தை திறப்பதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தும் இருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்த பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், சாவர்க்கர் பிறந்தநாளன்று இதனை திறப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கான தேதி மே 28. அந்த தேதியை தேர்வு செய்ததற்கான காரணம் அன்று தான் சாவர்க்கர் பிறந்தநாள். இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாவர்க்கர் பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராக எவ்வித செயலிலும் ஈடுபட மாட்டேன் என்று உறுதி கூறி, மன்னிப்பு கடிதம் எழுதி, சிறையில் இருந்து விடுதலை ஆனவர்.
A grateful nation pays humble tribute to Veer Savarkar, a great visionary nationalist who for our freedom suffered unspeakable British torture, on his birth anniversary. A prolific writer, social reformer and great thinker whose ...(1/2) pic.twitter.com/GZw5dqnn7D
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) May 28, 2023
இதன்மூலம் இந்திய விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்திய சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறப்பதை விட இந்திய மக்களுக்கு செய்கிற துரோகம் வேறு எதுவும் இருக்க முடியாது." என்று குறிப்பிட்டு உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் பல்வேறு தருணங்களில் சாவர்க்கரை விமர்சித்து பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications