சென்னையில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா.. உடனடியாக ஆக்ஷனில் இறங்கிய அரசு.. அதிரடி உத்தரவு
சென்னை: சென்னையில் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்பார்வையிட ஐஏஎஸ் அதிகாரிகளைத் தமிழக அரசு நியமித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகக் குறைந்து வந்த கொரோனா, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஓமிக்ரான் பரவல் காரணமாகவே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு உயரத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கிய போது, மாநிலத்தில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இப்போது கேஸ்களின் எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் நேற்று 6983 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினசரி பாதிப்பு 8981ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட சுமார் 1998 அதிகம் ஆகும். அதேபோல பாசிட்டிவ் விகிதமும் அச்சமூட்டும் வகையில் 5.4ஆக உயர்ந்துள்ளது. ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் பல மாதங்களுக்குப் பின்னர் தற்போது மீண்டும் 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

தலைநகர் சென்னை
இதில் தலைநகர் சென்னையின் நிலை தான் சற்று மோசமாக உள்ளது. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த உறுதி செய்யப்பட்ட கொரோனா கேஸ்களின் சரிபாதிக்கும் மேல் தலைநகர் சென்னையில் பதிவானது தான். சென்னையில் இன்று மட்டும் 4531 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. பாசிட்டிவ் விகிதமும் 11.5ஆக உயர்ந்துள்ளது. தற்போது சென்னையில் 15652 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சென்னையில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்பார்வையிட ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு ஐஏஎஸ் என 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video

என்ன பணி
இந்த அதிகாரிகள் நோய்த்தொற்று பரவல் தடுக்கும் பணிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு விதிகள் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்துதல் போன்ற பணிகளை ஐஏஎஸ் அதிகாரிகள் ஒருங்கிணைந்து மேற்பார்வையிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பொது இடங்களுக்கு வரும் பொதுமக்கள் மாஸ்க் அணிந்து, தனிமனித இடைவெளியை முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யச் சென்னை மாநகராட்சி சிறப்புக் குழுக்களையும் அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications