செம்ம ஐடியா.. மருத்துவத்துறையின் "நலம் 365" யூடியூப் சேனல்.. இனி வதந்திகளுக்கு எளிதாக முற்றுப்புள்ளி!
சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக "நலம் 365" என்ற யூடியூப் சேனல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த யூடியூப் சேனல் மூலம் மக்களின் உணவு பழக்கவழக்கம், குழந்தை வளர்ப்பு, நோய்களுக்கான விழிப்புணர்வு, அரசின் மருத்துவ திட்டங்கள் உள்ளிட்ட ஏராளமான விஷயங்கள் குறித்து மருத்துவத் துறை வல்லுநர்கள் விளக்கம் அளிக்கின்றனர். அதேபோல் வதந்திகள் மற்றும் மக்கள் கேட்கும் சந்தேகங்களுக்கும் யூடியூப் சேனல் மூலம் பதிலளிக்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் நலம் 365 எனும் யூடியூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த யூடியூப் சேனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், மக்களுக்கு சுகாதாரம், உணவு பழக்கவழக்கம், உடற்பயிற்சி ஆலோசனைகள், நோய்கள் பற்றி விளக்கம் உள்ளிட்டவை பற்றி சொல்ல வேண்டியது அவசியமானது.
அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் ஒரு சிலர் பொய்யான செய்திகளை பரப்புவதை தொழிலாக வைத்துள்ளனர். அதனை தடுக்கும் வகையில், நாமும் தயாராக வேண்டும். அதற்காக மருத்துவத்துறை சார்பில் நலம் 365 எனும் யூடியூப் சேனல் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், மக்களின் உடல் நலத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு செய்யப்படும்.
அதேபோல் மக்களுக்கு தேவையான மருத்துவ ரீதியான அறிவுரைகள், மருத்துவ வழிகாட்டுதல்கள் உள்ளிட்டவற்றை யூடியூப் வீடியோ மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படும். அதுமட்டுமல்லாமல் மாதத்தில் ஒரு நாள் மக்களிடம் தொடர்பு கொண்டு அவர்களின் பிரச்சினையை கேட்டறிந்து கலந்துரையாடவும், அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லை, மருந்து தட்டுப்பாடு போன்று பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இந்த சேனல் உதவியாக இருக்கும்.
யோகா, மூச்சு பயிற்சியை மக்களுக்கு சொல்லித் தரவும், உணவுப் பொருள்களின் அவசியம், அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய இந்த யூடியூப் சேனல் உதவியாக இருக்கும். எந்நேரமும் மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். இந்த சேனல் மக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில் அமையும். இந்த சேனலில் விளம்பரம் ஏதும் வராது. வணிக நோக்கத்திற்காக யூடியூப் சேனல் தொடங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
அதேபோல் நலம் 365 யூடியூப் சேனலில் கடந்த 3 நாட்களில் மட்டும் 25 வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோக்களில் சர்க்கரைகள் நோய் பற்றிய விழிப்புணர்வுகள், அஜீரணத்தால் ஏற்படும் பிரச்சினைகள், குழந்தைகளின் பற்களை பாதுகாப்பது எப்படி?, குழந்தைகளுக்கு காய்ச்சல் வருவதற்கான காரணம், கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வுகள் உள்ளிட்ட ஏராளமான வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீடியோவிலும் அரசு மருத்துவர்கள், துறைசார் வல்லுநர்கள் மற்றும் அரசின் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து மக்களுக்கு புரியும் வகையில் எடுத்து கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications