தமிழ்நாட்டில் ஷவர்மாவுக்கு தடையா? தீவிர ஆலோசனைக்கு பின்.. சுகாதார துறை கொடுத்த முக்கிய விளக்கம்
சென்னை: தமிழ்நாட்டில் உணவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் பரவி வரும் நிலையில், இது தொடர்பாக மக்கள் நலத்துறை சார்பில் முக்கிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் கேரள மாநிலம் காசர்கோடு அருகேயுள்ள செருவத்தூரில் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 14 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஷவர்மாவில் பயன்படுத்தப்பட்ட இறைச்சி முறையாகச் சமைக்கப்படாததே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஷவர்மா
இந்த சம்பவம் பேசுபொருள் ஆன நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஷவர்மா கடைகளிலும் பயன்படுத்தப்படும் இறைச்சி குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், ஷவர்மா வெளிநாட்டு உணவு என்றும் மேற்கத்திய நாடுகளின் தட்பவெப்ப நிலையில் கெடாமல் இருக்கும் என்றும் தெரிவித்தார். இதுபோன்ற உணவுகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையே மாநிலத்தில் ஷவர்மா உணவுக்குத் தடை விதிக்கப்பட்டதாகவும் தகவல் பரவியது.
Recommended Video

ஆலோசனைக் கூட்டம்
இந்நிலையில், இது தொடர்பாக மக்கள் நலத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் முக்கிய விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளார். சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவ மற்றும் மக்கள் நலத் துறை சார்பில் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கலப்படத்தைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தடை இல்லை
மேலும், அப்போது மாநிலத்தில் ஷவர்மா கடைகளுக்குத் தடை விதிக்கப்படவில்லை என்றும் இறைச்சி சரியானதாக இருக்க வேண்டும், அவை முறையாகச் சமைத்து இருக்க வேண்டியதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. தலைநகர் சென்னையில் மட்டும் மொத்தம் 530 ஷவர்மா கடைகள் உள்ளன. ஷவர்மா இறைச்சியைப் பரிசோதனை செய்ய மைக்ரோபல் டெஸ்ட் மேற்கொள்ளப்படும். இதற்காக சுமார் 160க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்து இறைச்சி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.

அறிவுறுத்தல்
சாலையோரங்களில் விற்பனை செய்யப்படும் கடைகளில் இறைச்சிகளைப் பதப்படுத்தி வைக்க ப்ரீசர் இருக்காது என்பதால், அவர்கள் ஒரு நாளுக்குத் தேவையான இறைச்சியை மட்டும் வாங்கி விற்க உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். கேரளாவில் ஏற்பட்டதைப் போல உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க முறையான சோதனைகளை மேற்கொள்ளவும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாம்பழ சீசன்
இப்போது மாம்பழ சீசன் என்பதால் மாம்பழங்கள் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுவது அதிகமாக இருக்கும். இதைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பான் மசாலா, குட்கா உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கப் பலரும் கோரிக்கை வைத்துள்ளதாகவும் இருப்பினும், அதன் மீதான தடை தொடரும் என்றும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications