தமிழகத்தில் ஒப்பந்தம் முடிந்த டோல்கேட்களை தூக்குங்க! நிதின் கட்கரியிடம் எ.வ.வேலு நேரில் வலியுறுத்தல்
சென்னை: தமிழகத்தில் நிலுவையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைப்பணிகளை விரைந்து முடித்திடவும், ஒப்பந்தம் முடிந்த சுங்கச்சாவடிகளை அகற்றிடக் கோரியும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை கடிதம் வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, தனது கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக நிதின் கட்கரி உறுதியளித்துள்ளார் எனத் தெரிவித்தார்.
மேலும், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த போது அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது;

காலதாமதமாக
''தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் பல்வேறு நிலைகளில் காலதாமதமாக நடைபெற்றுகொண்டு இருக்கிறது என்பதை தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் ஆய்வுக்கூட்டத்தில் எங்களிடத்தில் அறிவுறுத்தியதையடுத்து, நிலுவையில் உள்ள பணிகளை எல்லாம் விரைந்து செயல்படுத்தபட வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு சாலைகள் சம்பந்தமாக கடிதங்களை இன்றைய தினம் ஒன்றிய அரசாங்கத்தின் அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து வழங்கப்பட்டது.''

நிலுவையில் உள்ள பணிகள்
''குறிப்பாக தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள பணிகளான தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு உயர்மட்ட சாலை அமைப்பது மற்றும் தற்போது தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை உள்ள சாலைகள் 8 வழி சாலையாக விரிவாக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து செங்கல்பட்டு முதல் திண்டிவனம் வரை விரிவு படுத்த வேண்டும் என்று ஏற்கனவே 2 முறை வலியுறுத்தி உள்ளோம். இப்போது 3வது முறையாக பணிகளை நீங்கள் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.''

டோல்கேட்கள்
''பதற்றமான இடங்களான கப்பலூர், கிருஷ்ணகிரியில் ஏற்கனவே சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது, அது நகரப்பகுதியில் அமைந்திருக்கிறது, குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் கிருஷ்ணகிரி நகர்புறத்தில் சுங்கச்சாவடி அமைந்திருப்பதால் நகரத்தில் வசிக்கும் மக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கோ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கோ, அரசு மருத்துவக்கல்லூரிக்கு செல்வதற்கோ அந்த சுங்கசாவடியை கடந்து செல்லவேண்டும் என்ற நிலைதான் உள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் ஏற்கனவே பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர். அதை நானும், என் துறை செயலாளரும் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியிடம் விரிவாக எடுத்துக் கூறியுள்ளோம். ''

ஒப்பந்தம் முடிவடைந்த
''அதைதொடர்ந்து, பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த சுங்கசாவடிகளின் ஒப்பந்தம் முடிவடைந்த இடங்களில், 40 சதவீதம் குறைக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் வில்சனிடம் கூறியிருந்தார். அது சம்பந்தமாக கணக்குகள் எடுத்துள்ளோம் நேரம் முடிய வரும் சமயத்தில் அதை நாங்கள் மாற்றி அமைப்போம் என்று தெரிவித்து இருக்கிறார். ''

எதற்காக இந்த சந்திப்பு
''தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து செயல்படுத்திடவேண்டும் என்ற அடிப்படையில் தான் நிதின் கட்கரியை சந்தித்தோம். தமிழ்நாடு முதலமைச்சர் கூறிய கருத்துகளை அவர்களிடம் தெரிவித்தோம். அனைத்து பணிகளும் இந்த ஆண்டே விரைந்து முடித்திட துறையின் சார்பாக முயற்சி செய்வதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். ''












Click it and Unblock the Notifications