புத்தாண்டு கொண்டாட்டம்.. கடலில் இறங்கக் கூடாது! மது அருந்த கூடாது! தமிழக காவல்துறை ஸ்ட்ரிக்ட்
சென்னை: புத்தாண்டு தினத்தின் போது நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட அனுமதி இல்லை என தமிழக காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் டிசம்பர் 31 ஆம் தேதியும் ஜனவரி 1 ஆம் தேதியும் புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலா தலங்களிலும் பொது இடங்களிலும் கொண்டாட்டங்கள் நடைபெறும்.
டிசம்பர் 31 ஆம் தேதி அன்று கடற்கரைகளில் பொதுமக்கள் கூடி புத்தாண்டை வரவேற்பர். ஆயிரக்கணக்கானோர் கூடுவதால் இங்கு பாதுகாப்பு பணிகள் அதிகரிக்கப்படும். இந்த கொண்டாட்டங்களில் முடிவில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்தில் சிக்குவதும் வாடிக்கையாக உள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்கள்
இதனால் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சாலைகளில் போலீஸார் ரோந்து பணிகளில் ஈடுபடுவர். இந்த நிலையில் தற்போது கொரோனாவின் புதிய வேரியண்ட் பிஎப் 7 அதிகரித்து வருவதால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

டிஜிபி அறிக்கை
அந்த வகையில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு இதுதொடர்பாக சில அறிவுரைகளை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு டிசம்பர் 31 ஆம் தேதி அன்று மாலை பொது மக்கள் புத்தாண்டை பாதுகாப்பாகவும் அமைதியாகவும் கொண்டாடும் பொருட் கீழ்க்காணும் அறிவுரைகளை கடைப்பிடிக்க காவல் துறை கேட்டுக் கொள்கிறது.

90 ஆயிரம் போலீஸார்
டிசம்பர் 31 ஆம் தேதி இரவு பொது இடங்களிலும், சாலைகளிலும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது. டிசம்பர் 31 ஆம் தேதி அன்று மாலை முதல் சுமார் 90 ஆயிரம் காவல் துறையினர், 10 ஆயிரம் ஊர்க் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

வாகன சோதனை
வாகனச் சோதனை தமிழ்நாடு முழுவதும் நடைபெறும். எனவே நள்ளிரவு, மோட்டார் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை. முதல் நாள் இரவும், புத்தாண்டின் போதும் கடற்கரைகளில் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது.

மது அருந்தியவர்கள்
மது அருந்தியவர்கள், வாகனம் ஓட்டக் கூடாது. மீறினால் கைது செய்யப்படுவர். அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும். அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விபத்துகளை தவிர்க்கவும் உயிர் சேதத்தை குறைக்கவும் மட்டுமே இந்த நடவடிக்கைகள். மோட்டார் வாகனங்களில் நீண்ட தூரம் இரவு நேரங்களில் பயணிப்பவர்கள் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி தேநீர் அருந்தி பின்னர் பயணத்தை தொடர அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நெடுஞ்சாலை கடைகள்
அதற்காக இரவு முழுவதும் நெடுஞ்சாலைக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. வழிபாட்டுத் தலங்களுக்கு காவல் துறையில் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கு குழப்பம் விளைவிக்க முனைவோர் கைது செய்யப்படுவார்கள். வெளியூர்களுக்கு செல்பவர்கள், அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார் பூட்டிய வீட்டருகே காவல் ரோந்து ஏற்பாடு செய்யப்படும். இதனால் பூட்டிய வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் தவிர்க்கப்படும்.

கேளிக்கை விடுதிகள்
கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது காவல் துறையின் அனைத்து நிபந்தனைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருந்திய ரோந்து வாகனங்கள் மூலம் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். அத்தகையவர்கள் பற்றிய தகவலை காவல் துறைக்கு 100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தரும் பொதுமக்களின் ரகசியம் காக்கப்படும்.

விபத்தில்லா புத்தாண்டு
அவசர உதவி தேவைப்படுபவர்கள் காவல் உதவி என்ற அதிகாரப்பூர்வ செயலியை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதற்கு காவல் உதவி செயலியை இன்றே பதிவிறக்கம் செய்யவும் கேட்டுக் கொள்கிறோம். அசம்பாவிதம் இல்லாத விபத்தில்லாத புத்தாண்டு கொண்டாட தமிழக காவல் துறைக்கு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்கிறோம். அனைவருக்கும் தமிழ்நாடு காவல் துறையின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications