உயர் ஜாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு.. ஸ்டாலின் உட்பட தமிழக அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு
Recommended Video

சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின், முடிவிற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட தமிழகத்திலுள்ள பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சட்டசபையில் இன்று ஸ்டாலின் பேசுகையில், முன்னேறிய வகுப்பில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பது சமூக நீதிக் கொள்கைக்கு முற்றிலும் முரணானது. அதை நாசப்படுத்திடக் கூடியதுமான செயல்.

மறைந்த நீதிபதி ரத்னவேல் பாண்டியன், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது, என்று தீர்ப்பளித்துள்ளார்.
69% இட ஒதுக்கீட்டை வெற்றிகரமாக அமல்படுத்தி வரும் தமிழகத்திலிருந்து முதல் எதிர்ப்புக் குரல் ஆணித்தரமாக ஒலிக்க வேண்டும். பெரியார், அண்ணா, காமராஜர் ஆகியோர் பண்படுத்தித் தந்த வழியில், சமூக நீதியின் நாற்றங்காலாகத் தொடர்ந்து இருந்துவரும் தமிழக சட்டசபையிலிருந்து சமூக நீதியின் கட்டமைப்பை அசைத்துப் பார்க்க நினைக்கும் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் ஒன்றை இன்றே நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
பாமக நிறுவனர், ராமதாஸ், டிவிட்டரில் கூறுகையில், உண்மையான சமூக நீதி என்பது அனைத்து சமுதாயங்களுக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்குவது தான். எனவே, 2021ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகைகணக்கெடுப்பாக நடத்தி அனைத்து சமுதாயத்தினருக்கும் மக்கள்தொகைக்கேற்ப 100% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், முற்பட்ட வகுப்பினரில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீட்டை அளிக்க வகை செய்யும் சட்டத் திருத்தம், உண்மையில் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் நோக்கம் கொண்டதல்ல. மாறாக, ஏற்கெனவே இருக்கும் இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டுவதற்கான சதித்திட்டம் ஆகும். தேர்தல் ஆதாயத்திற்காக, முற்பட்ட வகுப்பினரை ஏமாற்றும் இந்த மோசடி முயற்சியைக் கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசும், மத்திய அரசு தனது முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications