வெற்றிநடைபோடும் தமிழகம்.. அதுவும் கொரோனாவுக்கு பின்! 10 லட்சம் ஐடி வேலைகள் - இன்னும் உயருமாம்
சென்னை: தமிழ்நாட்டில் தொழில்நுட்ப துறைகளில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்து புதிய மைல் கல்லை எட்டி இருக்கிறது.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தொழில்நுட்பத்துறை பெரும் பங்கை வகித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் தமிழ்நாட்டில் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து வருபவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியுள்ளது.

தமிழ்நாடு 3ம் இடம்
இந்திய அளவில் தொழில்நுட்பத்துறையில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கையில் 6 ல் ஒரு பங்கினர் தமிழ்நாட்டில் பணிபுரிந்து வருகிறார்கள். ஆனால், கர்நாடகாவும், மகாராஷ்டிராவும் இதில் முதல் 2 இடங்களை பிடித்து உள்ளன. தமிழ்நாடு இந்த வரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தெலுங்கானாவும் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பில் தமிழ்நாட்டுக்கு வலுவான போட்டியை அளித்து வருகிறது.

வேலைவாய்ப்புகள்
கொரோனாவுக்கு முன்பாக தமிழ்நாட்டில் தொழில்நுட்பத் துறையில் ஏழரை லட்சம் பேர் பணிபுரிந்து வந்துள்ளனர். கடந்த 2020 மார்ச் மாதத்திலிருந்து கடந்த ஜூன் மாதம் வரை தமிழ்நாட்டில் தொழில்நுட்பத் துறை வேலைவாய்ப்புகள் 30 சதவீதம் அதிகரித்து 10 லட்சத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டில் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆட்கள் சேர்க்கும் நிறுவனங்களின் அதிவேக நேர்காணல்கள் மூலம் பலர் பணிக்கு சென்று உள்ளனர்.

வீட்டிலிருந்து வேலை
அதேபோல் பெரும் அளவிலான பணியாளர்கள் வீட்டிலிருந்து பணி செய்யும் முறைக்கு மாறியதும் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகள் அதிகரித்து உள்ளதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. சென்னையை கடந்து 2 ஆம் நிலை மற்றும் 3 ஆம் நிலை நகரங்களிலும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகள் அதிகரித்து வருகின்றன. இதுவே மனித மூலதன வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

பெண் ஊழியர்களில் தமிழகம் முதலிடம்
குறிப்பாக பெண்கள் அதிகளவில் தொழில்நுட்ப பணிகளில் ஈடுபடும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்களில் 34% பேர் பெண்கள். கர்நாடகா தமிழ்நாட்டுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. தொழில்நுட்ப பணிகளை கடந்து ஐடி சார்ந்த பணிகள் மற்றும் பிபிஓக்களின் மூலமாகவும் பலருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்து இருக்கின்றன.

சென்னையே முதலிடம்
தமிழ்நாட்டில் கோவை, மதுரை, திருச்சி, திருப்பூர் போன்ற நகரங்களில் ஐடி துறை சார்ந்த பணிகள் இருந்தாலும், 65% பேர் சென்னையிலேயே பணிபுரிகின்றனர். சென்னை அல்லாத பிற நகரங்களில் நிறுவனங்களை நிறுவுவதன் மூலம் குறைந்த செலவுகளில் நிறுவனங்களை நடத்தலாம் என்று கூறப்படுகிறது. ஐடி துறையில் இருக்கும் தேவை காரணமாக கடந்த 12 மாதங்களில் 22% ஐடி பணியாளர்கள் வேறு நிறுவனங்களின் பணிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

புதியவர்களுக்கு பணி
இந்தியா அளவில் உள்ள பொறியியல் பட்டதாரிகளில் 70% பேர் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள். அதேபோல் படித்து முடித்து வேலை தேடும் புதியவர்களுக்கு பணி வழங்கும் களமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தொழில் தொடங்குவதால் அது சார்ந்து ரியல் எஸ்டேட் துறையும் அபார வளர்ச்சியை அடைந்து வருகிறது. அதேபோல் ஐடி துறையில் சராசரி ஊதியமும் கல்லூரி மற்றும் திறமையின் அடிப்படையில் அதிகரித்து உள்ளது.












Click it and Unblock the Notifications