வெளியானது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்! வழக்கம் போல் மாணவிகள்தான் டாப்! ரிசல்ட்டை பார்ப்பது எப்படி?
சென்னை: தமிழ்நாட்டில் 2023- 2024 கல்வியாண்டுக்கான 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 10 மற்றும் +2ஆம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. +2 மாணவர்களுக்கு இந்தாண்டு மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து மார்ச் 26 முதல் ஏப்ரல் 8 வரை 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டன. +2 பொதுத்தேர்வை இந்தாண்டு 7.8 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய நிலையில், 10ஆம் வகுப்புத் தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
தேர்வு முடிவுகள்: +2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி வெளியான நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை (மே 10) அன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
இணையதளங்கள்: மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ ஆகிய தளங்களில் தங்கள் 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். இந்த தளங்களில் சென்று பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை டைப் செய்து தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மெசேஜ் வரும்: பள்ளி மாணவர்களுக்கு உறுதிமொழி படிவத்தில் படிவத்தைச் சமர்ப்பித்து இருப்பார்கள். அதில் மொபைல் எண் கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய மொபைல் எண்ணுக்கும் எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு 10ஆம் வகுப்புத் தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 91.55% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்தாண்டு 91.35% பேர் தேர்ச்சி அடைந்த நிலையில், இந்தாண்டு தேர்ச்சி அடைந்தோர் விகிதம் அதிகரித்துள்ளது. வழக்கம் போல இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.. மாணவிகள் 4,22,591 பேரும், மாணவர்கள் 3,96,152 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், தேர்வு எழுதிய மாணவர்களில் 88.58% பேரும், மாணவிகளில் 94.53% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications