கோவை முதல் குமரி வரை.. எதிர்க்கட்சிகளின் கோட்டையில் திமுக பெற்ற விஸ்வரூப வெற்றி! இது தான் காரணம்
சென்னை: அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கோட்டையாகக் கருதப்பட்ட பகுதிகளிலும் கூட திமுக கலக்கல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கடந்த பிப். 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
இதில் மொத்தம் 60.07% வாக்குகள் பதிவாகி இருந்தன. அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 80.49% வாக்குகளும் குறைந்தபட்சமாக சென்னையில் 43.59% வாக்குகளும் பதிவானது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தச் சூழலில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், இதில் திமுக மிகப் பெரிய ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது. கடந்த அக். மாதம் நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலைப் போலவே அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மோசமான தோல்வியை எதிர்கொண்டுள்ளது.

திமுக பெரிய வெற்றி
தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட 21 மாநகராட்சிகள் உள்ள நிலையில், அத்தனையிலும் திமுக கூட்டணியைப் பெரும்பான்மை பெறுகிறது. மேலும், நகராட்சிகளைப் பொறுத்தவரைத் தமிழ்நாட்டில் மொத்தம் 138 நகராட்சிகள் உள்ள நிலையில், அதில் 120க்கும் அதிகமான நகராட்சிகளில் திமுக கூட்டணி வெல்லும் நிலையில் உள்ளது. பேரூராட்சிகளிலும் கூட இதே நிலை தான், 490 பேரூராட்சிகளில் 360க்கும் அதிகமான பேரூராட்சிகளில் திமுக கூட்டணியே முன்னிலையில் உள்ளது.

எதிர்க்கட்சிகள் கோட்டை
அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கோட்டையாகக் கருதப்பட்ட பகுதிகளிலும் கூட திமுக மிகப் பெரியளவில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக அதிமுகவின் வலுவான கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தையும் திமுக தன்வசப்படுத்தியுள்ளது. கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் திமுக பிற பகுதிகளில் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த போதிலும், கொங்கு மண்டலத்தில் மோசமான தோல்வியைச் சந்தித்தது. கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, மாவட்டங்களில் அதிமுக பெற்ற வெற்றி தான், அதிமுகவுக்குக் கவுரவமான இடங்களில் வெல்ல உதவியது.

அதிமுகவுக்கு ஷாக் தந்த கோவை
குறிப்பாக, கடந்த சட்டசபைத் தேர்தலில் கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணியே கைப்பற்றியது. அப்படி அதிமுகவின் எஃகு கோட்டையாகக் கருதப்பட்ட கோவையை இந்த முறை திமுக தகர்த்துள்ளது. கோவை மாநகராட்சியில் திமுக வெல்லும் நிலையில் உள்ளது. அதேபோல அங்குள்ள 7 நகராட்சி, 33 பேரூராட்சிகளில் பெரும்பாலான இடங்களில் திமுக கூட்டணியே வென்றுள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் மாநகராட்சி, 6 நகராட்சி, 31 பேரூராட்சிகளை முழுமையாக திமுக கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக எடப்பாடி நகராட்சியும் திமுக வசமாக்கியுள்ளது.

ஓபிஎஸ் தொகுதியில் திமுக வெற்றி
திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட இதர கொங்கு மண்டலங்களிலும் கூட இதே நிலை தான். குறிப்பாக, தற்போது அதிமுகவில் உள்ள மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனின் சொந்த தொகுதியான ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சியை 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக திமுக வென்றுள்ளது. அதேபோல முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியிலும் பெரும்பாலான இடங்களை திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே கைப்பற்றியுள்ளன. குறிப்பாக ஓபிஎஸ்-இன் போடி சட்டசபை தொகுதியில் உள்ள குச்சனூர் பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ள நிலையில், அதில் 11இல் திமுகவும் ஒன்றில் சுயேச்சையும் வென்று அதிமுகவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

பாமக கோட்டை தருமபுரியில் திமுக கொடி
தருமபுரி மாவட்டமும் பாமகவின் கோட்டையாகவே கருதப்படுகிறது. பாமக உருவாக்கப்பட்ட 1989ஆம் ஆண்டு முதல் அக்கட்சி வலுவாக உள்ள பகுதிகளில் முக்கியமானது தர்மபுரி. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாகவே தர்மபுரியில் திமுகவின் கை ஓங்கி வருகிறது. அதே ஃபார்மை திமுக இப்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தக்க வைத்துள்ளது. தர்மபுரி நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் திமுக 18, அதிமுக 13, விசிக மற்றும் சுயேச்சை தலா 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தர்மபுரியை திமுக கைப்பற்றி உள்ளது. அதேபோல அங்கு உள்ள 10 பேரூராட்சிகளில் 9இல் திமுக வென்றுள்ளது. ஓசூர் பேரூராட்சியில் திமுக மற்றும் அதிமுக தலா 7 இடங்களில் வென்றுள்ளது. அங்கு பாமக, மற்றும் சுயேச்சைகள் 2 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.

நாகர்கோவில்
மேலும், கோவை தாண்டி பாஜக வலுவாக உள்ள இடங்களில் ஒன்று கன்னியாகுமரி, குறிப்பாக இங்கு நாகர்கோவில் உள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக வென்ற 4 இடங்களில் இதுவும் ஒன்றாகும். எனவே, நாகர்கோவில் மாநகராட்சியை பாஜக கைப்பற்ற வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. இருப்பினும், தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. நாகர்கோவிலில் மொத்தம் 52 வார்டுகள் உள்ள நிலையில், அதில் 32இல் வென்று நாகர்கோவில் மாநகராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது. அங்கு அதிமுக 7 வார்டுகளிலும், பாஜக 11 வார்டுகளிலும், சுயேச்சை வேட்பாளர்கள் இருவர் மட்டுமே வென்றுள்ளனர்.

என்ன காரணம்
அதாவது அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கோட்டையாகக் கருதப்பட்ட பகுதிகளிலும் கூட திமுக கலக்கல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இது வாக்காளர்கள் முதல்வர் ஸ்டாலின் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுவதாகவும் கடந்த 9 மாத நல்லாட்சிக்குக் கிடைத்த சான்று என்றும் திமுக தரப்பு கூறி வருகிறது. மேலும், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக அசுர பலத்தில் உள்ளதையுமே இது காட்டுவதாக அவர்கள் தெரிவித்து வருகின்றனர். 9 மாத திமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகள் செயல்படாமல் பலவீனமாக இருப்பதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும், எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் இல்லாமல் பிரிந்து இருப்பதும் எதிர்க்கட்சிகளை வழிநடத்தும் வலிமையான தலைவர்கள் இல்லாமல் போனதும் தோல்விக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications