சென்னை மாநகராட்சியில் வி.சி.க.வுக்கு 6 வார்டுகள்; மா.கம்யூனிஸ்டுக்கு 4 வார்டுகள் ஒதுக்கிய திமுக!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 வார்டுகளை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சென்னை மாநகராட்சியில் 4 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

தொல்.திருமாவளவன் பேச்சுவார்த்தை
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். ''மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் போதிய அளவில் இடங்கள் ஒதுக்கிட கோரிக்கை விடுக்க விடுத்தோம். மேயர், துணை மேயர், தலைவர், துணைத் தலைவர் பதவிகளிலும் விசிகவுக்கு போதிய இடங்கள் ஒதுக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்தோம். தமிழகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டுவர வேண்டுமெனவும் வலியுறுத்தினோம். அரியலூர் மாணவி இலாவண்யா இறப்பில் மதவெறி அரசியல் செய்யும் சனாதன பிற்போக்கு சக்திகளை ஒடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தோம்' என்று திருமாவளவன் கூறினார்.

வி.சி.க.வுக்கு 6 வார்டுகள்
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 வார்டுகளை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. அதாவது திருவொற்றியூர்( வார்டு எண்: 18), பெரம்பூர்(45), திருவிக நகர்(72) அண்ணா நகர்(107), அசோக்நகர்(135), பள்ளிக்கரணை(190) ஆகிய 6 வார்டுகள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை மாநகராட்சியில் காங்கிரசுக்கு 17 வார்டுகள் ஒதுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
இதேபோல் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 29 வார்டுகளை திமுக ஒதுக்கியுள்ளது. இதில் சென்னை மாநகராட்சியில் 4 வார்டுகளும் அடங்கும். சென்னை, தாம்பரம், ஆவடி, கடலூர், தஞ்சை, திருச்சி, கும்பகோணம், சேலம், ஈரோடு, திருப்பூர், சிவகாசி, தூத்துக்குடி மாநகராட்சி வார்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.












Click it and Unblock the Notifications