விநாயகர் சதுர்த்தி பொது விடுமுறையை செப்.18 க்கு மாற்ற விஎச்பி கோரிக்கை
சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள பொது விடுமுறை அறிவிப்பில், விநாயகர் சதுர்த்தியை செப்டம்பர் 18ஆம் தேதி திங்கள்கிழமை உடனடியாக மாற்றி அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) தலைவர் ஆர்.ஆர். கோபால்ஜி கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: வரும் 2023ம் ஆண்டுக்கான காலண்டர்கள் வெளியாகி வருகின்றன. அதில் பஞ்சாங்கம் அடிப்படையில், செப்டம்பர் 18ம் தேதி, திங்கட்கிழமை, விநாயகர் சதுர்த்தி என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழக அரசின் பொது விடுமுறை பட்டியலில் விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள் செப்டம்பர் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை அளிக்கிறது.

விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி என்பது இந்துக்களின் முழு முதற் கடவுளான விநாயகர் பெருமாளின் அவதார தினம் ஆகும். அது ஆவணி மாத அமாவாசையை தொடர்ந்து வரக் கூடிய வளர்பிறை சதுர்த்தி தினமாகும். அதன்படி 2023 ஆம் ஆண்டு ஆவணி அமாவாசையை தொடர்ந்து வரக் கூடிய சதுர்த்தியானது, செப்டம்பர் 18ஆம் தேதி காலை 11.39 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 11.50 வரை உள்ளது.

இந்துக்களின் மரபு
ஹிந்துக்களின் மரபின்படி, இரவு நேரத்துக்கு பின்பு வரக்கூடிய மிச்ச நேரத்தை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அப்படி பார்த்தால், செப்டம்பர் 18ம் தேதி தான் விநாயகர் சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும். அப்படித்தான் ஹிந்து முறைப்படியான காலண்டர்களிலும், பஞ்சாங்கங்களிலும், செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 17ஆம் தேதி அல்ல
இதை கருத்தில் எடுத்துக் கொள்ளாமல், விநாயகர் சதுர்த்தி, செப்டம்பர் 17 என்று தமிழ்நாடு அரசு தன்னிச்சையாக அறிவித்துள்ளது கண்டனத்திற்கு உரியது. இது, ஹிந்துக்களின் நம்பிக்கையை அவமதிக்கும் செயல். ஒரு மதத்தின் பண்டிகையை, அந்த மதத்தில் நம்பிக்கை கொண்டவர்களும் ஆன்மீகப் பெரியோர்களும் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர அரசாங்கம் அல்ல.

பண்டிகை தினங்கள்
பிற மதங்களின் பண்டிகை தினங்களை அந்தந்த மத தலைவர்கள் தான் முடிவு செய்கிறார்கள். அரசு அறிவித்த தேதி, அந்த மதத் தலைவர்கள் முடிவு செய்யும் தேதியுடன் மாறுபட்டால், அரசு அறிவித்த தேதியை மாற்றிக்கொண்டது உண்டு. அந்த அடிப்டையில், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பொது விடுமுறை அறிவிப்பில், விநாயகர் சதுர்த்தியை, செப்டம்பர் 18ஆம் தேதி, திங்கட்கிழமை என்று உடனடியாக மாற்றி அறிவிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க, ஆதீனங்கள், மடாதிபதிகள், ஆன்மிகப்பெரியவர்களின் ஆலோசனையை பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கோபால்ஜி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications