சென்னையில் இன்றுடன் முடிவுக்கு வரும் மழை.. சின்னதா ஒரு ரெஸ்ட் எடுத்துட்டு திரும்பி வரும்.. வெதர்மேன்
சென்னை: சென்னையில் வெப்பச்சலனத்தால் பெய்யும் மழை இன்றுடன் முடிவடைந்து சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் செப்டம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் தொடங்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் தென் மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. சென்னையில் கடந்த இரு தினங்களாக ஊட்டி கிளைமேட் போல் குளுகுளுவென குளிர்ச்சியாக உள்ளது.
நேற்று முன் தினம் சென்னையில் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

போக்குவரத்து பாதிப்பு
போக்குவரத்து ஆங்காங்கே பாதிக்கப்பட்டது. அது போல் நேற்றைய தினமும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. நேற்று முன் தினம் திருப்பூர் மாவட்டத்தில் கனமழை பெய்தது. தென் மேற்கு பருவமழை கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்த மழை பெய்ததாக வெதர்மேன் தெரிவித்திருந்தார்.

அசம்பாவிதம் நிகழா வண்ணம்
ரப்பர் படகுகள், கயிறுகள் உள்ளிட்ட பொருட்களுடன் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் இருந்து மக்களை மீட்க பேரிடர் மீட்பு குழுவினரும் தீயணைப்பு துறையினரும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருந்தனர். அது போல் மின்சார வாரியத்தினரும் அசம்பாவிதம் நிகழாத வண்ணம் பார்த்துக் கொள்ள ஆயத்தமாகியிருந்தனர்.

சென்னையில் இன்றுடன் மழை
இந்த நிலையில் சென்னையில் இன்றுடன் மழை முடிவடைந்து சிறிய இடைவெளிக்கு பிறகு தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது வலைதள பக்கத்தில் கூறுகையில் தமிழகம் உள்பட சென்னையில் கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் தேவைக்கு அதிகமாகவே மழை பெய்துள்ளது.

வெப்பச்சலனப் பகுதி
இவை எல்லாம் வெப்பச்சலன பகுதிகளுக்குள்பட்ட இடத்தில் வருவதால் மழை பெய்தது. தமிழகத்தின் வடக்கு பகுதியில் இன்றுடன் மழை குறைந்துவிடும். பின்னர் சிறிய இடைவெளி எடுத்து செப்டம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் மீண்டும் மழை பெய்யும். வால்பாறை, கூடலூர், கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

திண்டுக்கல்
திருப்பூரிலும் திண்டுக்கல்லிலும் கனமழைக்கு வாய்ப்பில்லை. கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும். நேற்றைய நிலவரப்பட்டி சோளிங்கநல்லூரில் 101 மி.மீ. மழையும், சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் 87 மி.மீ.மழையும் உத்தண்டியில் 65 மி.மீ. மழையும், சோளிங்கநல்லூர் அலுவலகத்தில் 62 மி.மீ. மழையும் கேளம்பாக்கத்தில் 61 மி.மீ.மழையும். வளசரவாக்கத்தில் 55 மி.மீ மழையும், அயனாவரத்தில் 53 மி.மீ.ரும் எம்ஜிஆர் நகரில் 52 மழையும் பதிவாகியிருந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம்
அது போல் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 10 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. திருக்கழுகுன்றத்திலும் 10 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. நீலகிரியில் 87 மி.மீ மழையும் கோவையில் சின்னக்கல்லூரில் 76 மி.மீ மழையும் பெய்துள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications