வெயிலுக்கு விட்டாச்சு பிரேக்.. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைதான்.. சென்னையில் கிளைமேட் எப்படி
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது
சென்னை: தமிழ்நாட்டில் பல இடங்களில் மிதமான மழை தொடரும் நிலையில், வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த பிப். மாதமே வெப்பம் உச்சம் தொட்டது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வெப்பநிலை சில நாட்கள் சதமடிக்கவும் கூட செய்தது. இதனிடையே சில நாட்களாக மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மழை
கடுமையான வெப்பத்தில் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், இப்போது வெப்பம் குறைந்து மழை பெய்வது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்) 70 மிமீ, மஞ்சளார் (தேனி), மேட்டூர் (சேலம்), மேற்கு தாம்பரம் பகுதிகளில் 60 மிமீ மழை பெய்துள்ளது. அதேபோல வெப்பத்தைப் பொறுத்தவரை ஈரோட்டில் வெப்பம் சதமடித்துள்ளது. அங்கே 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

மழை இருக்கு
மேலும், வரும் நாட்களிலும் கணிசமாக மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மார்ச் 19), நாளை (மார்ச் 20) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் நாட்களில் வானிலை
நாளை மறுநாள் (மார்ச் 21) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல வரும் மார்ச் 22 மற்றும் மார்ச் 23 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை கிளைமேட்
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
மேலும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வெப்பம் வழக்கைத்தை விட 3.1 டிகிரி முதல் 5 டிகிரி வரை வெப்பம் அதிகமாகப் பதிவாகியுள்ளது. மற்ற மாவட்டங்களில் வெப்பத்தில் பெரியளவில் மாறுபாடு இல்லை.












Click it and Unblock the Notifications