2020 தான் இலக்கு... நதிகள் இணைக்கப்படும்... தமிழக அரசு உறுதி
சென்னை: தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டம் 2020 டிசம்பருக்குள் நிறைவேற்றப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு, தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்படி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர்ந்தார்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக பொதுப்பணித் துறை செயலாளர் மற்றும் திட்டத்தை அமல்படுத்தி வரும் பொறியாளர்கள் சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு திட்டம் 2020 டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக இதுவரை 515 கோடியே 95 லட்சம் ரூபாயை தமிழக அரசு செலவிட்டுள்ளது என்றும்,
872 கோடி ரூபாய் கூடுதல் செலவிற்காக மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கோரியுள்ளதாகவும், அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இந்த அறிக்கை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 14ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications