எங்கும் வருவோம் உமைத் தடுக்க.. டாஸ்மாக் வழக்கில் மநீம கேவியட் மனுதாக்கல்.. கமல்ஹாசன் டிவிட்!
தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மேல்முறையீட்டு வழக்கில் மக்கள் நீதி மய்யம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மேல்முறையீட்டு வழக்கில் மக்கள் நீதி மய்யம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளதால் நாடு முழுக்க மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் மதுவிற்பனை கடைகள், பான் மசாலா கடைகள் இயங்க அனுமதி அளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் தமிழகத்தில் அனைத்து மண்டலங்களிலும் மதுபான கடைகள் திறக்கப்பட்டது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.

டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது
ஆனால் தமிழகத்தில் இப்படி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது பெரிய பிரச்சனை ஆனது. தமிழகத்தில் முதல்நாள் வசூல் 170 கோடியை தாண்டியது. தமிழகம் முழுக்க டாஸ்மாக்கில் குடிமகன்கள் பலர் வயது வித்தியாசமின்றி, முகத்தில் மாஸ்க் கூட அணியாமல் வரிசையில் நின்றார்கள். முண்டி அடித்துக்கொண்டு சமூக இடைவெளி விற்காமல் நின்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. டாஸ்மாக் காரணமாக கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

சென்னை ஹைகோர்ட்
இந்த நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளை வரும் 17ம் தேதி வரை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தனிமனித இடைவெளி பின்பற்றப்பட வில்லை என்று கூறி தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மக்கள் நீதி மய்யம் மற்றும் வழக்கறிஞர் ராஜேஷ் ஆகியோர் தொடுத்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவும் அச்சம் உள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேல்முறையீடு
இனி ஆன்லைன் மூலம் மட்டுமே மது விற்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு இதற்கு எதிராக மேல் முறையீடு செய்துள்ளது. டெல்லி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இது தொடர்பாக மேல்முறையீடு செய்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மேல்முறையீட்டு வழக்கில் மக்கள் நீதி மய்யம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில் எங்களின் விளக்கத்தை கேட்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்துள்ளனர்.

கமல்ஹாசன் டிவிட்
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டிவிட் செய்துள்ளார். அதில், குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட தமிழ் பெண்களின் தாலிகளோடு, குடிக்காத தமிழர்களின் உயிரையும் பணயம் வைத்து, சூதாட அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்லுமாம் தமிழக அரசு. எங்கும் வருவோம் உமைத் தடுக்க. மக்கள் நீதியே வெல்லும், என்று அவர் தனது குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications