டாஸ்மாக் வருமானம் உயர்வு.. தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றுவதே திமுகவின் நோக்கம்.. சாடும் அண்ணாமலை!
சென்னை: தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை குறைவதற்கு டாஸ்மாக் வருமான உயர்வே முக்கிய காரணம் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். அதேபோல் தமிழ்நாட்டை குடிகார மாநிலமாக மாற்றிவிட வேண்டும் என்பதே திமுகவின் தொலைநோக்கு திட்டம் என்று கூறிய அண்ணாமலை, மத்திய அரசின் பல திட்டங்களுக்கு புதிய தமிழ் பெயர்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் சூட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், நிறைவேற்றாமல் பல வாக்குறுதிகள் காத்திருக்க, ஏமாற்றம் அளிக்கும் விதமாக அமைந்தது 2023-24 நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை.
மத்திய அரசின் பல திட்டங்களுக்கு புதிய தமிழ் பெயர்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் சூட்டப்பட்டுள்ளது. 'தமிழகத்தின் கடன் சுமையை குறைப்போம்' என்று கூறிவிட்டு ஆட்சிக்கு வந்த மூன்று வருடங்களில் தமிழகத்தின் மொத்த கடன் சுமையை ரூ.7,26,028 கோடிக்கு எடுத்து சென்று மாபெரும் சாதனையை திறனற்ற திமுக அரசு புரியவுள்ளது. இதில் விஷயம் என்னவென்றால், தமிழகத்தின் மொத்த கடன்தொகை நமது நாட்டின் தற்போதைய வெளிக்கடனை விட அதிகம்.

ரூ.29 ஆயிரமாக வழங்குக
ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்குப் பிறகு, 'மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்' என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி. வரும் செப்டம்பர் மாதம் இந்த தொகை வழங்கப்படும்போது, முதல் தவணையில் இதுவரையிலான 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து, 29000 ரூபாயாக வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

அனைவருக்கும் உரிமைத் தொகை
அதோடு 'தகுதியுடைய மகளிருக்கே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்' என்று மடைமாற்றாமல், திமுக தனது தேர்தல் வாக்குறுதியான 'அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்' என்று கூறியதை நினைவில் கொண்டு தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.

மருத்துவமனை உள்கட்டமைப்புகள்
மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த தேவையான நிதி குறித்து எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. சிதிலமடைந்து இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் மேம்பாடு குறித்தும் எந்த அறிவிப்பும் இல்லை. புதிதாக கட்டிடங்கள் கட்டுவதில் முனைப்புடன் இருக்கும் அரசு தற்போதுள்ள உள்கட்டமைப்பை பராமரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

பள்ளிக் கட்டிடங்களை சரி செய்க
எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி சரியாக செலவிடப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பினில் பயிலும் மாணவர்களுக்கு கல்வியறிவும் எண் கணித திறனும் உயர கொண்டுவரப்பட்ட இத்திட்டம் பயனளிக்கிறதா என்று அரசு ஆராய்ந்து தேவையான மாற்றங்களை கொண்டுவர வேண்டும். 2022ஆம் ஆண்டுக்கான ASER அறிக்கையின் படி தமிழகத்தில் மூன்றாம் மற்றும் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் கற்றல் திறன் சரிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேபோல், பத்தாயிரத்திற்கு மேற்பட்ட சிதிலமடைந்து கிடக்கும் பள்ளி கட்டிடங்களை சரி செய்ய போதிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

திமுகவின் தொலைநோக்கு
அதேபோல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், சென்ற ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்தாமல் வருவாய் பற்றாக்குறையை முன்பை விட குறைத்து விட்டோம் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. இந்த ஆண்டு வருவாய் பற்றாக்குறை குறைவதற்கு முக்கிய காரணி டார்கெட் வைத்து செயல்படும் அமைச்சர் செந்தில் பாலாஜி தான். ரூ.36,013 கோடி இருந்த டாஸ்மாக் வருமானத்தை ஓரே ஆண்டில் ரூ.45,000 கோடிக்கு எடுத்து சென்றதோடு அடுத்த நிதி ஆண்டில் ரூ.50,000 கோடி வசூலித்து தமிழகத்தை ஒரு குடிகார மாநிலமாக மாற்றிவிட வேண்டும் என்பதே திமுகவின் தொலைநோக்கு திட்டம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications