தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் வருகிறது செக்.. மதுபிரியர்களுக்கு குட் நியூஸ்! ஏப்ரலில் மொத்தமாக மாறுது
சென்னை: டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில் இதனை தடுக்க தமிழக அரசு எச்சரித்து இருந்தது. இந்த நிலையில், மதுக்கடைகளை கணினிமயமாக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. உற்பத்தி முதல் விற்பனை வரை அனைத்து நிலைகளை கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அரசின் டாஸ்மாக் மூலமாக மது விற்பனை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 4,829 கடைகள் செயல்பட்டு வருகின்றன. காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெறுகிறது. மது விற்பனை மூலம் தமிழக அரசுக்கு சுமர் 45 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது.

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரு நாளைக்கு சுமார் 10 லட்சம் மது பாட்டில்கள் விற்பனையாகிறது. இது போக பீர் பாட்டில்களும் விற்பனை செய்யப்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. மது பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.
எனினும், பல்வேறு இடங்களில் தொடர்ந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளது. டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்குவதாக குற்றம் சாட்டி சமூக வலைத்தளங்களிலும் வீடியோக்கள் பரவி வருகின்றன. இதனால், இது போன்ற சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டது.
அதன்படி, மதுக்கடைகளை கணினிமயமாக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்து, உற்பத்தி முதல் விற்பனை வரை அனைத்து நிலைகளை கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது ராணிப்பேட்டை, ராமநாதபுரம் மாவட்ட டாஸ்மாக் கடைகளில் கணிணி மயமாக்கப்பட்டு மது விற்பனை நடைபெறுகிறது. இந்த நடைமுறை படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
இன்னொரு பக்கம் டாஸ்மாக் விற்பனையாளர்கள், சூப்பர்வைசர்களுக்கு டிஜிட்டல் நடைமுறை குறித்த பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டமாக இந்தப் பயிற்சி அளிக்க திட்டமிட்டப்பட்டுள்ளதாம். அடுத்த 5 மாதத்துக்குள் 38 மாவட்டங்களில் உள்ள 4,829 மதுக்கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்களுக்கு இந்தப் பயிற்சியை அளிக்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அதன்பிறகு ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மது விற்பனையை கணினிமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. டிஜிட்டல் மயமாக்கப்பட்டால் மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுவது முற்றிலும் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தி ஆலையில் இருந்து கடைகளுக்கு வருவது வரை கியூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்யபடும்.
இதனால், ஸ்டாக் சரியாக கண்காணிக்கப்படும். இதனால் பாட்டில்கள் டேமேஜ் ஆகியிருந்தாலும் திருப்பி அனுப்பிவிட முடியும். கிடங்குகளில் இருந்து மதுக்கடைகளுக்கு மதுபான பெட்டிகள் வரும்போது, அங்குள்ள பணியாளர்கள் அதில் உள்ள கியூ.ஆர். கோடினை, கருவி மூலம் ஸ்கேன் செய்து வரவு வைத்துக்கொள்வார்கள். பிறகு, மது பாட்டில்களை விற்பனை செய்யும்போது அதே கருவி மூலம் ஸ்கேன் செய்து இருப்பில் இருந்து கழித்து மதுப்பிரியர்களிடம் கொடுக்க வேண்டும்.
விற்பனை செய்யும் போது, ரசீது எந்திரத்தில் இருந்து வெளிவரும் ரசீதை கிழித்து உரியவரிடம் வழங்க வேண்டும். பணத்தை டிஜிட்டல் முறையிலும் மதுப்பிரியர்கள் செலுத்தலாம். முற்றிலும் டிஜிட்டல் முறையில் விற்பனை நடைபெறும் என்பதால் முறைகேடுகள் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாட்டிலுக்கு கூடுதலாக 10 வாங்கும் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என சொல்லபப்டுவதால் மதுபிரியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications