Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாஸ்மாக்கை மூடுங்க.. தஞ்சாவூரில் மானமே போகுது.. அசூர் மதுக்கடையால் வேதனை! முதல்வருக்கு ஹென்றி கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீண்டும் ஒரு முக்கிய கோரிக்கையை முன்னிறுத்தி, தமிழக முதல்வருக்கு அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவை கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறது.அதன்படி, மக்களுக்கு பாதிப்பையும், மனஉளைச்சலையும் ஏற்படுத்தி வரும் அசூர் டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறது.

அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையானது, தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வருகிறது. சமீபத்தில்கூட, திருவள்ளூர் மாவட்டம் பென்னலூர்பேட்டை அரசு மேல்நிலை பள்ளி விவகாரத்தில் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருந்தார் அப்பேரவையின் தலைவர் ஹென்றி.

tasmac thanjavur tanjore

விழியற்றோர் வாழ்வு: அதேபோல, விழியற்றவர்களின் வாழ்விற்கும், பயிற்சி திறன் மேம்பாட்டிற்கும், வேலை வாய்ப்புக்கும் எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வலியுறுத்தி, கடிதம் எழுதியிருந்தார். இப்போது அடுத்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது அகில இந்திய ஜனநாயக மக்கள் பேரவை.

அதன்படி, பொதுமக்களை பெரிதும் பாதிக்கும் விதிகளுக்கு புறம்பான மதுபான கடையை நிரந்தரமாக மூடிட வேண்டும் என்று அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கோரிக்கை விடுத்துள்ளதுடன். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

டாஸ்மாக் கடை எண் 7946: அந்த கடிதத்தில் உள்ளதாவது: "தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம் அசூர் புறவழிச் சாலை, நெடுஞ்சாலை எண்:36 சேவை சாலையில், பெருமாண்டி ஊராட்சி எல்லையில் விதிகளுக்கு புறம்பாகவும் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் டாஸ்மாக் கடை எண் 7946 என்ற கடையை நிரந்தரமாக அகற்றிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் முதலமைச்சர்களின் வரிசையில் தலை சிறந்த முதலமைச்சராகவும், தமிழர்கள் பெருமை கொள்ளும் வகையிலும், தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மேலான கவனத்திற்கு இதனை கொண்டு வருகிறேன்.

நித்தம் நித்தம் துன்பம்: கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகின்ற டாஸ்மாக் கடை எண்: 7946- என்ற கடையினால் இந்த பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நித்தம் நித்தம் சந்திக்கும் துன்பங்களும் பிரச்சனைகளும் ஏராளம்.

காரணம் இந்த டாஸ்மாக் கடை அமைந்திருக்குமிடம் குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகவும், வழிபாட்டுத் தலங்கள், கல்லூரிகள்/பள்ளிகள், பேருந்து மற்றும் ஆட்டோ நிறுத்தங்கள், மருத்துவமனைகள் அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் நிறைந்தும் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைந்திருக்கும் காரணத்தினால் பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் முக்கிய சாலையாக, இந்த தேசிய நெடுஞ்சாலை எண்:36 விளங்குகிறது.

ஹைகோர்ட் உத்தரவு: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவையும் மீறி, தேசிய நெடுஞ்சாலை எண்:36, சேவை சாலையில் டாஸ்மாக் கடை திறக்கப்படவிருகின்ற செய்தியைறிந்து, இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சிகுள்ளாகினர்.மேலும், இதனால் ஏற்படப் போகும் பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு அச்சம் அடைந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதே பகுதியில் நீதிமன்ற உத்தரவுக்கு முன்பு, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த மதுபான கடையை, பொதுமக்களின் எதிர்ப்புக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, பெருமாண்டி பஞ்சாயத்தினால் திருமணம் நிறைவேற்றப்பட்டு அதன் அடிப்படையில் இந்த கடை அகற்றப்பட்டது. மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, பொதுமக்களின் எதிர்ப்புக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிக்காமல், அகற்றப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

அடித்து நொறுக்கப்பட்டது: பொதுமக்கள் அச்சப்பட்டது போலவே இந்த தேசிய நெடுஞ்சாலை எண்:36 இல் டாஸ்மாக் கடை திறக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் மது பிரியர்களால் அருகிலுள்ள கடைகள் கண்மூடித்தனமாக அடித்து நொறுக்கப்பட்டன.

அவ்வழியே தினசரி வேலைகள் மற்றும் வழக்கமான பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடந்துச் செல்லும்போதெல்லாம் மது பிரியர்களால் பல வகையிலும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு தாக்கப்படுகின்றனர். பொதுமக்கள் எவையெல்லாம் நடந்து விடுமோ என்று அச்சப்பட்டார்களோ அவைகளெல்லாம் நாள்தோறும் நடந்தேறி வருகின்றன.

மதுபானம்: மது அருந்திவிட்டு அருகிலிருக்கும் கடைகள் மற்றும் உணவகங்களில் கலாட்டா செய்வதும், இந்த சாலைகளில் பயணிக்கும் பொதுமக்களை அசிங்கமாகவும், அவதூறாகவும் பேசியும், பெண்களை கையைப் பிடித்து இழுத்து வம்பு செய்வதும், அரை நிர்வாண கோலத்தில் அங்கும், இங்கும் அலைந்து திரிவதும், ஆடையின்றி சாலையின் நடுவே படுத்து உருளுவதும், மறைக்க வேண்டிய அந்தரங்க உறுப்பை வெளிக்காட்டி அசிங்கமாக நடந்து கொள்வது உள்ளிட்ட மோசமான சம்பவங்கள் நாளும் அரங்கேறி வருகின்றன.

மேலும், மதுபானம் அருந்திவிட்டு போதையில் வாகனம் ஓட்டுபவர்களால் அதிக அளவில் போக்குவரத்து பிரச்சினைகளும் மற்றும் வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன.

அரிவாள் வெட்டு: சமீபத்தில் மது போதை ஆசாமியால் எட்டு பேருக்கு அரிவாள் வெட்டு குத்து சம்பவமும் இந்த கடையருகில் நடைபெற்றுள்ளது. மேலும் பள்ளி / கல்லூரி மாணவர்கள் இச்சாலையில் அமைந்திருக்கும் டாஸ்மாக் கடையை கடந்து செல்லும் பொழுது, போதை ஆசாமிகள் ஆபாசமாக பேசி, அருவருத்தக்க செய்கைகள் செய்வதன் காரணமாக மாணவர்களும், பெண்களும், பொதுமக்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

மது பிரியர்களுக்கு, மது வாங்குவதற்கு பணம் வேண்டி இப்பகுதியில் உள்ளவர்களிடமும், இச்சாலையை கடந்து செல்பவர்களிடமும், களவுகளும் கொடுஞ் செயல்களும், கொலையும், கொள்ளையும் நடைபெறுவதோடு மட்டுமில்லாமல், பணம் தர மறுக்கும் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களிடம், காலி மது பாட்டில்களை உடைத்து, கூர்மையாக்கி குத்தி கொன்று விடுவதாக மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. அப்படியும் பணம் தர மறுப்பவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாக உள்ளது.

மது பிரியர்கள்: இந்த டாஸ்மாக் கடையமைந்துள்ள சாலையை கடக்கும் பொதுமக்கள், தங்கள் உயிர் மற்றும் மானத்தையும் கையில் பிடித்துக் கொண்டு செல்லும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தான் உள்ளார்கள். இப்படி மது பிரியர்களின் அதீத சமூக விரோத செயல்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்தியும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென மனம் குமுறுகின்றனர்.

மது பிரியர்கள் வெறும் மது பிரியர்களாக மட்டுமல்லாமல், கொலை பிரியர்களாகவும்,கொள்ளை பிரியர்களாகவும், கொடுஞ் செயல் பிரியர்களாகவும், காம களியாட்ட பிரியர்களாகவும், பாலியல் துன்புறுத்தல் பிரியர்களாகவும், வாகன விபத்தினை ஏற்படுத்தும் பிரியர்களாகவும், அடிதடி சண்டை பிரியர்களாகவும் மற்றும் சமூக விரோத பிரியர்களாகவும் செயல்படுவது தான் வேதனையிலும் வேதனை.

கலால் துறை: பொதுமக்கள் சந்திக்கும் இன்னல்களை குறித்தும் மற்றும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி வலியுறுத்தியும், அதே பகுதியைச் சார்ந்த சமூக ஆர்வலர் திரு.போ.சாக்ரடீஸ் என்பவர் முதலமைச்சர் தனிப்பிரிவு, தஞ்சை மாவட்ட ஆட்சியர், மது மற்றும் ஆயத்துறை ஆணையர், வருவாய்க் கோட்ட அலுவலர் கும்பகோணம், வட்டாட்சியர் கும்பகோணம், கலால் தனி வட்டாட்சியர் கும்பகோணம், துணை மேலாளர் டாஸ்மாக், தஞ்சாவூர், வட்டார வளர்ச்சி அலுவலர் கும்பகோணம், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், கும்பகோணம், ஆணையாளர் கலால்துறை, உதவி ஆணையர் கலால் துறை ஆகியோர்களுக்கு புகார் மனுக்கள் அனுப்பியுள்ளார்.

இந்த கடிதத்தின் அடிப்படையில், கலால் துறை அதிகாரிகள் மற்றும் தாசில்தார் ஆகியோர் நேரில் கள ஆய்வு செய்து, அரசு விதிகளுக்கு புறம்பாக டாஸ்மாக் கடை செயல்படுவதை உறுதி செய்து 30 நாட்களுக்குள் அகற்றப்படுமென உறுதி அளித்து சென்றுள்ளனர்.

மன உளைச்சல்: ஆனால், மேற்கண்ட அரசு அதிகாரிகள் கொடுத்த உண்மைக்கு புறமான அறிக்கையின் அடிப்படையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்கள் டாஸ்மாக் கடை செயல்படுவதற்கு எந்தவிதமான தடையுமில்லை, காரணம் விதிமீறல் ஏதுமில்லை என தவறான உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரியவருகிறது. இந்த தஞ்சை மாவட்ட ஆட்சியரின் உத்தரவு குறித்த செய்தியை அறிந்த பொதுமக்களும் வர்த்தகர்களும் நம்பிக்கை இழந்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இது சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும் நிச்சயம் நீதி தேவதை நீதி வழங்குவார் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் கிராம மக்களிடையே விசாரித்ததில் தெரிய வருகின்றது.

தவறான அறிக்கை: மேலும் விசாரித்ததில் இந்த டாஸ்மாக் கடை அமைந்திருக்குமிடம், இந்தப் பகுதி திமுக கட்சியின் முக்கிய அரசியல் பிரமுகருக்கு சொந்தமானதெனவும், எனவே, அவர் தன்னுடைய அரசியல் செல்வாக்கை கொண்டு, அரசு அதிகாரிகளின் கண்களை கட்டியும், வாயை அடைத்தும், கைகளை கட்டி போட்டும் இப்படி ஒரு உண்மைக்குப் புறம்பான தவறான அறிக்கையை தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு சமர்ப்பிக்க வைத்து தனது டாஸ்மாக் கடையை மூடுவதை தடுத்துள்ளார் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர், மேற்கண்ட பொதுமக்கள் நலன் சார்ந்த பிரச்சனையை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, விதிகளுக்கு புறம்பாக, அசூர் புறவழி தேசிய நெடுஞ்சாலை எண்:36, சேவை சாலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் டாஸ்மாக் கடை எண்: 7946 எண் கொண்ட அரசு மதுபான சில்லறை விற்பனை கடையை விரைவில் அகற்றுவதற்கு உத்தரவு பிறப்பித்து, பொதுமக்கள் தங்களின் வழக்கமான வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வதற்கு வழிவகை செய்திட வேண்டுமென வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி முதல்வருக்கு டாக்டர் ஹென்றி எழுதியிருக்கும் இந்த கடிதம், தமிழக மக்களின் கவனத்தையும் சேர்த்தே குவித்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+